‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற இலக்கில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை
‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற இலக்கில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார்.
நாடாளுமன்றத்தின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ந் தேதி தொடங்கும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த கூட்டத் தொடர் தற்போதைய 17-வது மக்களவையின் இறுதி கூட்டத் தொடராகும். மேலும் நடப்பு ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஜனவரி 31-ந் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரைக்கு பின்னர் கூட்டத்தொடர் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். இதன் பின்னர் குதிரை பூட்டிய தேர் வண்டியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புதிய நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார். இந்த பின்னர் குடியரசுத் தலைவர் முர்மு உரையாற்றினார் . அதில் தெரிவித்ததாவது..
“ நமது அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிறது. மேரி மட்டி, மேரா தேஷ் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலமாக நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் விடுதலைக்காக பாடுபட்ட வீரர்களின் நினைவாக மண் எடுத்து வரப்பட்டு அது டெல்லியில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு என்பது பல்வேறு சாதனைகளை இந்தியா படைத்த ஆண்டாகும். இந்தியா தற்பொழுது வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக மாறி உள்ளது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இது எனது முதல் உரை. இந்த பிரம்மாண்டமான புதிய கட்டிடம் நாட்டின் புதிய பாதை காணும் வழியாக தான் நான் பார்க்கிறேன்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 நீக்கப்பட்டதால்
அந்த மாநிலத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இந்த நாட்டு மக்கள் என்னென்ன முன்னேற்றங்கள் மாற்றங்கள் வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தார்களோ அவை அனைத்தும் கடந்த 10 ஆண்டுகளில் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம் எவ்வளவு இடர்பாடுகள் இருந்தாலும் இந்தியா தொடர்ந்து தனது பாதையில் முன்னேறி செல்லும். உலகளாவிய சவால்கள் என பல இருந்தும் இந்தியா வேகமாக முன்னேறும் பொருளாதாரம் கொண்ட நாடாக உள்ளது. நடப்பு நிதியாண்டில் இரண்டாவது பகுதியில் இந்தியாவின் ஜிடிபி 7.5% வளர்ச்சி அடைந்துள்ளது.
நிலவின் தென்துருவத்திற்கு சென்ற முதல் நாடு என்ற பெருமையை இந்தியா படைத்தது. ஜி 20 நாடுகள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் நூற்றுக்கணக்கான பதக்கங்களை வென்று குவித்தது. அட்டல் சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டது இப்படி பல சாதனைகளை கடந்த ஒரு ஆண்டில் இந்தியா செய்து முடித்துள்ளது.
வளர்ந்த இந்தியாவின் பிரம்மாண்டமான கட்டிடம் இளைஞர் சக்தி, பெண்கள் சக்தி, விவசாயிகள் மற்றும் ஏழைகள் ஆகிய தூண்களில் நிற்கும். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு சமூகத்திலும், அவர்கள் அனைவரின் சூழ்நிலையும்
கனவுகளும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. எனவே, இந்த 4 தூண்களையும் பலப்படுத்த எனது அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
4 கோடியே 10 லட்சம் ஏழைக் குடும்பங்கள் நிரந்தர வீடுகளைப் பெற்றுள்ளன.
இதற்காக சுமார் 6 லட்சம் கோடி செலவிடப்பட்டது. முதன்முறையாக சுமார் 11 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் நீர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறு சிறு மற்றும் சிறு தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. இன்று சுமார் 3.5 கோடி MSME- கள் Udyam மற்றும் Udyam Assist
தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெண்களின் பொருளாதார பங்களிப்பை அதிகரிக்க அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. சுமார் 10 கோடி பேர் மகளிர் சுயஉதவி குழுக்களில் இணைந்துள்ளனர். 2 கோடி பெண்களை சுயமுன்னேற்றம் செய்வதற்காக பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. நாட்டின் ஏற்றுமதி 450 பில்லியன் டாலரிலிருந்து தற்போது 775 பில்லியன் டாலருக்கு மேல் அதிகரித்துள்ளது. முந்தைய காலங்களைவிட அந்நிய நேரடி முதலீடு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. காதி மற்றும் கிராமிய தொழில் பொருட்களின் விற்பனை 4 மடங்குக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.” இவ்வாறு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.