For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காஞ்சிபுரத்தில் 375 ரவுடிகளை கண்காணித்து வருகிறோம்! என்கவுன்ட்டர் நடந்த நிலையில் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் பேட்டி!

12:43 PM Dec 27, 2023 IST | Web Editor
காஞ்சிபுரத்தில் 375 ரவுடிகளை கண்காணித்து வருகிறோம்  என்கவுன்ட்டர் நடந்த நிலையில் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் பேட்டி
Advertisement

காஞ்சிபுரத்தில் 2 ரவுடிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நிலையில்,  அப்பகுதியில் உள்ள 375 ரவுடிகளையும் தீவிரமாக கண்காணித்து வருவதாக தமிழ்நாடு காவல்துறை வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார். 

Advertisement

காஞ்சிபுரத்தில் கடந்த 26-ந் தேதி ரவுடி சரவணன் என்ற பிரபாகரன் என்பவரை கொலை செய்யப்பட்ட வழக்கில் காஞ்சிபுரம் பல்லவ மேடு மேற்கு பகுதியைச் சேர்ந்த ரகு என்ற ரகுவரன்,  சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அசேன் என்ற கருப்பு அசேன் ஆகியோரை சிவ காஞ்சி போலீசார் தேடி வந்தனர்.

இன்று அதிகாலை காஞ்சிபுரம் புதிய ரயில் நிலைய மேம்பாலம் அருகில் 2 பேரும் பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்து பிடிப்பதற்காக விஷ்ணு காஞ்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுதாகர்,  சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் காவலர் சசிகுமார் ஆகியோர் சென்றனர்.

அப்போது சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் காவலர் சசிகுமாரை ரவுடிகள் ரகு, அசேன் அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் கை, காலில் வெட்டு விழுந்தது.

இதையடுத்து உதவி ஆய்வாளர் சுதாகரை வெட்ட முயன்ற போது அவர் தற்காப்புக்காக துப்பாக்கியால் இரண்டு ரவுண்டு சுட்டதாக தெரிகிறது.  இதில் ரகு, அசேன் ஆகிய இருவருக்கும் மார்பில் குண்டு பாய்ந்தது.  மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.  இந்நிலையில்,  வெட்டு காயமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம்,  காவலர் சசிகுமார் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

என்கவுன்ட்டர் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை வடக்கு மண்டல ஐஜி கண்ணன் , சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிறைய தொழிற்சாலைகள் உள்ளன.  எனவே இங்கு ரவுடிசம் உள்ள காரணத்தினால் மாவட்டத்தில் உள்ள 375 ரவுடிகளையும் லிஸ்ட் எடுத்து கண்காணித்து வருகிறோம்.  அவர்கள் நிறுவனங்களுக்குச் சென்று மாமுல் கேட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் போலீசாருக்கு தகவல் அளிக்க மாட்டார்கள்.  ரவுடிகள் மாமுல் கேட்டாலும் அல்லது குற்ற சம்பவங்களில் ஈடுபட்டாலும் அவர்களை தொடர்ச்சியாக நவீன எலக்ட்ரானிக் சாதனங்கள் அதாவது LEGAL ELECTRONICS SURVEYALANCE மூலம் கண்காணித்து வருகிறோம்.

இந்த என்கவுன்ட்டர் மட்டுமல்லாது இதற்கு முன்பு 3 என்கவுன்ட்டர்கள் நடைபெற்றன. தற்போது என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரகுவின் மீது மூன்று கொலை வழக்குகளும்,  அசேன் என்கிற கருப்பு பாஷா மீது இரண்டு கொலை வழக்குகளும் உள்ளன.  கொலை செய்யப்பட்ட பிரபாகரன் மீது ஆறு கொலை வழக்குகள் மற்றும் 31 குற்ற வழக்குகள் உள்ளன.

காஞ்சிபுரத்தில் உள்ள 375 ரவுடிகளில் யாரெல்லாம் அதிகமான குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்களோ,  அதாவது பொதுமக்களை அச்சுறுத்தும் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ரவுடிகள் மீது குண்டாஸ் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படு வருகிறது.

இவ்வாறு ஐஜி கண்ணன் பேட்டியளித்தார்.

Tags :
Advertisement