என்ஐஏ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்!
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன் உள்பட 3 பேர் இன்று சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகினர்.
கடந்த பிப்.2 ஆம் தேதி தடை செய்யப்பட்ட அமைப்பிடம் இருந்து பணம் பெற்றதாக கிடைத்த தகவலின்பேரில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் வீடு மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். 2022 ஆம் ஆண்டு பதியப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான வழக்கு குறித்தும், விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்கம் செய்ய நிதி சேர்ப்பது தொடர்பாக விசாரணை நடத்தியதாக என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து, சோதனையில் ஒரு லேப்டாப், 7 செல்போன்கள், 8 சிம் கார்டுகள், 4 பென் டிரைவ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் தொடர்பான சட்ட விரோதமான புத்தகங்கள் சிலவற்றை பறிமுதல் செய்ததாகவும் என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு என்.ஐ.ஏ. தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் உள்பட 3 பேர் விசாரணைக்காக ஆஜராகினர்.