For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது 1 ரூபாய் கூட தராதவர்களைப் பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

12:32 PM Mar 04, 2024 IST | Web Editor
 மழை  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது 1 ரூபாய் கூட தராதவர்களைப் பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள்    முதலமைச்சர் மு க ஸ்டாலின்
Advertisement

மழை, வெள்ளத்தால் தமிழ்நாடு பாதிக்கப்பட்ட போது 1 ரூபாய் கூட தராதவர்களை பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

Advertisement

மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில் தோட்டம் பால்பண்ணை பகுதியில் ரூ.114.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். முன்னதாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். காவல்துறை மரியாதையை ஏற்றுக்கொண்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உள்ளிட்டோர் பூங்கோத்து கொடுத்து முதலமைச்சரை வரவேற்றனர்.

முதலமைச்சருடன் அமைச்சர்கள் மெய்யநாதன்,  எ.வ.வேலு,  ரகுபதி,  டி.ஆர்.பி.ராஜா, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்,  அன்பில் மகேஸ் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, புதிய பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் விழா மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 

“டெல்டா மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் மகிழ்ச்சி. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், மயிலாடுதுறை காவிரியால் செழிப்போடு இருக்கும் மாவட்டம். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் அமைக்கப்பட்ட பூம்புகார் இடம் பெற்றுள்ள மாவட்டம். தில்லையாடி வள்ளியம்மை, மூவலூர் ராமமிர்தம் அம்மையார் பிறந்த மண் மயிலாடுதுறை.

மாவட்டத்தை அறிவிப்பதை விட, உள் கட்டமைப்பை மேம்படுத்துவதே முக்கியம். அறிவிப்புகளை அரசாணைகளாக மாற்றுவதோடு,  அதை அமல்படுத்துவதை கண்காணிக்கும் அரசு.  தஞ்சை மாவட்டத்தில் திருவோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்படும். தமிழக வரலாற்றிலேயே கிராமப்புற பட்டாக்களை கணினி மூலம் வழங்குவது இதுவே முதல் முறை.

மயிலாடுதுறைக்கு ரூ.10 கோடியில் புதிய நகராட்சி கட்டடம் கட்டப்படும். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உப்புநீர் புகுவதை தடுக்க ரூ.44 கோடியில் திட்டம். ரூ.2.40 கோடி செலவில் புதிய படுகையணை கட்டப்படும். மயிலாடுதுறையில் ரூ.30 கோடியில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும். 3 மாவட்ட கல்லூரிகளுக்கு 1,642 கணினிகள் வழங்கப்படும். மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.5 கோடியில் புதிய நூலகம் கட்டப்படும். எல்லோரும் எல்லாம் என்ற அடிப்படையில் தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. 1.15 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது.

நான் முதல்வன் திட்டம் மூலம் 2 லட்சம் மாணவர்கள் திறன் மேம்பாடு பயிற்சி பெற்றுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட 1 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு ரூ.966 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மக்களின் மனசாட்சியாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. மார்ச் 6-ம் தேதி "நீங்கள் நலமா" என்ற புதிய திட்டம் சென்னையில் தொடங்கப்படுகிறது.

"நீங்கள் நலமா" திட்டம் மூலம் பொதுமக்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருத்து கேட்கப்படும். முதலமைச்சர், அமைச்சர்,  துறை செயலாளர்கள், அதிகாரிகள் மக்களை தொடர்புகொண்டு கோரிக்கைகளை கேட்பார்கள். மக்களின் குறைகளை கேட்டு நிதி நெருக்கடியிலும், திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். தேர்தல் வருவதால் பிரதமர் மோடி தமிழ்நாடு வர தொடங்கியுள்ளார். தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திப்பவர்கள் அல்ல நாங்கள். தமிழ்நாடு மழை, வெள்ளத்திற்கு 1 ரூபாய் கூட தராதவர்களை பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள். திமுக அரசு பக்கம் மக்கள் எப்போதும் துணை நிற்பார்கள்” இவ்வாறு அவர் பேசினார்.

Tags :
Advertisement