"ராமர் கோயிலை நாங்கள் எதிர்க்கவில்லை" - திக் விஜய் சிங்
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை காங்கிரஸ் எப்போதும் எதிர்த்தது கிடையாது என மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சரும், காங். மூத்த தலைவருமான திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திரைத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் இந்த விழாவில் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என மொத்தம் 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
” அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை காங்கிரஸ் எப்போதும் எதிர்த்தது கிடையாது . நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றே வலியுறுத்தினோம். பாஜக பாபர் மசூதியை இடித்தது; ஆனால் அங்கு கோயில் கட்டவில்லை; ஏனெனில் பாபர் மசூதி இடிக்கப்படும்வரை இது இந்து-முஸ்லிம் பிரச்னையாக மாறவில்லை; பிரச்னையை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுவதே பாஜகவின் உத்தி “ என திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.