“தமிழ்நாடு எம்.பி.க்களுடன் பிரதமரை சந்திக்க உள்ளோம்” - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாடு அரசின் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 14-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த இரண்டு பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் 17-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது எம்.எல்.ஏ.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு 21-ம் தேதி நிதி அமைச்சரும், வேளாண் துறை அமைச்சரும் பதில் அளித்தனர். இதனையடுத்து சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் சட்டப்பேரவை கூடவில்லை. இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
"தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம் தொடர்பாகத் தெரிவிக்க விரும்புகிறேன். மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காகத் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வட மாநிலங்களில் எந்த விகித்தத்தில் தொகுதிகள் மறுவரையறைக்கப்படுகிறதோ அதே விகிதத்தில் தமிழ்நாட்டிலும் செயல்படுத்த வேண்டும். தமிழ்நாடு முன்னெடுத்துச் செல்கின்ற தொகுதி மறுவரையறை விழிப்புணர்வு குறித்து தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்கள்தொகை கட்டுபாட்டை வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டிய மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் ஆதரவு தெரிவித்த் அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நியாயமான தொகுதி மறுவரையறையை பெற்றிட தமிழ்நாடு எம்.பி.க்களுடன் பிரதமரை சந்தித்து வலியுறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். தற்போது இருக்கும் தொகுதி மறுவரையறை மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டும்"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.