“நாங்களும் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளை கற்பிக்கிறோம், இதனால் உ.பி. சிறிதாகிவிட்டதா?” - யோகி ஆதித்தியநாத் கேள்வி!
புதிய தேசிய கல்வி கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாடு கல்விக்கான நிதியை விடுவிப்போம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி இருந்தார். இதற்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் டெல்லியில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை முன் வைத்தனர். மேலும் புதிய தேசிய கல்வி கொள்கை மூலம் மத்திய அரசு இந்தியை திணிப்பதாக கூறி திமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது இந்திய அளவிலான அரசியலில் பேசுபொருளாகி இருக்கும் நிலையில், பாஜக கூட்டணி கட்சியினர் பலர் புதிய தேசிய கல்வி கொள்கை ஆதரவாகவும் திமுகவின் நிலைபாட்டுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மொழியை வைத்து பிளவு ஏற்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முயற்சிப்பதாக பேசி இருந்தார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. மொழி திணிப்பையும் ஆதிக்கத்தையுமே நாங்கள் எதிர்க்கிறோம். வாக்கு வங்கி அரசியலுக்காக பேசவில்லை, இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம். வெறுப்பு குறித்து யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்” என்று பதிலளித்திருந்தார்.
இந்த நிலையில் திமுக-வை விமர்சிக்கும் விதத்தில் மும்மொழிக் கொள்கை குறித்து யோகி ஆதித்தியநாத் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக PTI நடத்திய நேர்காணலில் பேசிய அவர், “உத்திர பிரதேசத்தில் நாங்களும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி ஆகிய மொழிகளைக் கற்பிக்கிறோம், இதனால் உத்திர பிரதேசம் சிறிதாகிவிட்டதா? உ.பி-யில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. தங்கள் குறுகிய அரசியல் நலன்களுக்காக இந்த மொழி சர்ச்சையை உருவாக்குபவர்கள். இதனால் தங்கள் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம், ஆனால், அவர்கள் ஒரு வகையில் இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை தாக்கும் விதத்தில் செயல்படுகிறார்கள்”
இவ்வாறு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.