“சட்டவிரோத மனித வாழ்விட விரிவாக்கத்தின் விளைவே வயநாடு பேரிடர்” - மத்திய அரசு!
“வயநாட்டில் நிலச்சரிவுகளை ஏற்படுத்திய பலவீனமான பகுதிகளில் சட்டவிரோத மனித வாழ்விட விரிவாக்கத்திற்கும், சுரங்கத்திற்கும் கேரள அரசு அனுமதி அளித்துள்ளது” என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்தார்.
கேரள மாநிலத்தின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது என மத்திய அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தெரிவித்தது. இந்நிலையில் வயநாடு நிலச்சரிவு பேரழிவிற்கு கேரள அரசின் சட்டவிரோத மனித வாழ்விட விரிவாக்கமே காரணம் என மத்திய சுற்றுசூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது;
6 மாநிலங்களில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் 56,800 சதுர கிலோமீட்டர் பரப்பளவை, சுற்றுசூழல் உணர்திறன் பகுதியாக அறிவிக்க கடந்த 2014 முதல் கடந்த ஜூலை 31ஆம் தேதிவரை 6 வரைவு அறிக்கைகளை சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஆனால் மாநிலங்களின் ஆட்சேபனை கருத்துகளால் இறுதி அறிவிப்பு நிலுவையில் உள்ளது.
இதுதொடர்பாக மாநில அரசுகளுடன் தொடர்ச்சியாக ஆலோசனைகளை மேற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரலில் நிபுணர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. அவர்களும், அவர்களுடன் தொடர்பில் உள்ளனர்.
காடுகளின் உரிமை மாநிலங்களிடம் இருப்பதால், அவர்களின் ஆட்சேபனைகளையும் ஆலோசனைகளையும் வனத்துறையின் முன்னாள் இயக்குநர் ஜெனரல் சஞ்சய் குமார் தலைமையிலான குழுவிடம் சமர்ப்பிக்குமாறு கூறினோம். உள்ளூர் பங்குதாரர்களுடனும் கலந்தாலோசிக்க வேண்டும். ஆனால் இதைச் செய்யாமல், சட்டவிரோத மனிதர் வாழ்விட விரிவாக்கம் மற்றும் சுரங்கம் கேரளாவில் அனுமதிக்கப்பட்டது. இதன் விளைவாகவே (வயநாட்டில்) இந்த இயற்கை பேரழிவு ஏற்பட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலைகள், இமயமலை போன்றவை மிக எளிதில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய மிகவும் பலவீனமான பகுதிகளில் ஒன்றாகும். இதுபோன்ற பகுதிகளில் பேரழிவுகளைத் தடுக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கேரள அரசுக்கும் இதற்கான பொறுப்பு உள்ளது” என தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் கேரளாவின் நிலச்சரிவு ஏற்பட்ட வயநாடு மாவட்டத்தின் 13 கிராமங்கள் உட்பட, மேற்கு தொடர்ச்சி மலையின் 56,800 சதுர கிமீ பகுதியை சுற்றுசூழல் உணர்திறன் பகுதியாக அறிவிக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. கடந்த 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 31ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்புகளில் முண்டக்கை, சூரல்மலை மற்றும் அட்டமலா பகுதிகள் இடம்பெறவில்லை.
குஜராத்தில் 449 சதுர கிமீ, மகாராஷ்டிராவில் 17,340 சதுர கிமீ, கோவாவில் 1,461 சதுர கிமீ, கர்நாடகாவில் 20,668 சதுர கிமீ, தமிழ்நாட்டில் 6,914 சதுர கிமீ, கேரளாவில் 7,9,93 சதுர கிமீ என மொத்தம் 56,825.7 சதுர கிமீ சுற்றுசூழல் உணர்திறன் பகுதியாக அறிவிக்க முன்மொழியப்பட்டுள்ளது.