"வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் 100 வீடுகள்" - சித்தராமையா அறிவிப்பு!
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும் என்று அந்த மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 29ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவால் சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளில் இருந்த வீடுகளும் மண்ணால் மூடப்பட்டன. 400 குடும்பங்கள் இந்த நிலச்சரிவில் சிக்கினர்.
இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக தொடர்ந்து 5-வது நாளாக மீட்பு படையினர் முழு வீச்சில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். தற்போதுவரை 1000த்திற்கும் அதிமானோர் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தோண்ட தோண்ட சடலங்கள் வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
இதையும் படியுங்கள் : “உற்பத்தித்துறையில் இந்தியா சாதனை படைத்து வருகிறது” – பிரதமர் மோடி பெருமிதம்!
இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டுக்கு கர்நாடக அரசு துணை நிற்கும் என்று அந்த மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது ;
"வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். இந்நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எங்களது ஆதரவை அளிப்போம். இந்நிலையில் வயநாடு நிலச்சரிவு பேரிடரில் பாதிக்கப்பட்டோரின் துயர் துடைக்கும் விதமாக கர்நாடக அரசு சார்பில் 100 வீடுகள் கட்டித் தட்டித்தரப்படும்"
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.