For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#wayanad மக்களவைத் தொகுதிக்கு நவ. 13ல் இடைத் தேர்தல் - தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு!

04:56 PM Oct 15, 2024 IST | Web Editor
 wayanad மக்களவைத் தொகுதிக்கு நவ  13ல் இடைத் தேர்தல்    தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு
Advertisement

கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நவம்பர் 13-ந் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Advertisement

வயநாடு மக்களவை தொகுதி எம்பியாக வெற்றி பெற்ற ராகுல் காந்தி தமது பதவியை ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார். உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் தோல்வி அடைந்த ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் 7,06,367 வாக்குகள் பெற்றிருந்தார். இத்தொகுதியில் பதிவான வாக்குகளில் மொத்தம் 64.94% வாக்குகளை ராகுல் காந்தி பெற்றார். தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட சிபிஐ கட்சியின் சுனீரை 4,31,770 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி தோற்கடித்தார்.

இதனையடுத்து 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டார். உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் ராகுல் காந்தி இம்முறை போட்டியிட்டு இரு தொகுதிகளிலுமே வென்றார். வயநாடு மக்களவை தொகுதியில் இந்த முறை 6,47,445 வாக்குகளை ராகுல் காந்தி பெற்றார். இத்தொகுதியில் பதிவான வாக்குகளில் 59.69% வாக்குகளை ராகுல் காந்தி பெற்றிருந்தார். அவரை எதிர்த்து மூத்த இடதுசாரித் தலைவரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜா போட்டியிட்டார்.

ஆனி ராஜாவை 3,64,422 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி தோற்கடித்தார். மக்களவை  தேர்தலில் 2 தொகுதிகளில் வென்ற ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதி எம்பி பதவியை தக்க வைத்துக் கொண்டு வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால் அதே நாளில் வயநாடு மக்களவை தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக தமது தங்கை பிரியங்கா காந்தி போட்டியிடுவார் எனவும் ராகுல் காந்தி அறிவித்தார். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தல் களத்தை சந்திக்க இருக்கிறார்.

இதனிடையே வயநாடு மக்களவை தொகுதியில் வரலாறு காணாத நிலச்சரிவால் பெருந்துயரம் நிகழ்ந்தது. இதனால் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது வயநாடு மக்களவை தொகுதியில் இயல்பு நிலைமை திரும்பியுள்ளது. இதனையடுத்து வயநாடு மக்களவை தொகுதியில் நவம்பர் 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.

வயநாடு மக்களவை தொகுதியில் வரும் 18-ந் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. அக்டோபர் 25-ந் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசிநாள். வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் அக்டோபர் 30-ந் தேதி. வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23-ந் தேதி நடைபெறும்.

Tags :
Advertisement