வயநாடு நிலச்சரிவு பகுதிகளை ராணுவ உடையில் ஆய்வு செய்த மோகன்லால்! ரூ.3 கோடி நிதியுதவி!
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிகளை நேரில் சென்று நடிகர் மோகன்லால் ஆய்வு செய்தார். மேலும் ரூ.3 கோடி நிதியுதவியும் வழங்கினார்.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 29ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து மூன்று நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவால் சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளில் இருந்த வீடுகளும் மண்ணால் மூடப்பட்டன. 400 குடும்பங்கள் இந்த நிலச்சரிவில் சிக்கினர்.
இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக தொடர்ந்து ஐந்தாவது நாளாக மீட்பு படையினர் முழு வீச்சில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் நடிகரும், துணை ராணுவத்தின் லெப்டினன்ட் கர்னல் என்ற கவுரவப் பதவி பெற்றவருமான மோகன்லால் மேப்பாடியில் உள்ள தற்காலிக ராணுவ முகாமில் ராணுவ அதிகாரிகளுடன், மீட்புப் பணிகள் குறித்து கலந்துரையாடல் நடத்தினார். இதனைத் தொடர்ந்து, வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலைக்கு, ராணுவ வாகனத்தில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ரூ.3 கோடி நிதியுதவி வழங்கினார்.