வயநாட்டில் 4-வது நாளாக தொடரும் மீட்புப் பணிகள்: 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 4-வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, கடந்த 29ஆம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து மூன்று நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களில் தற்போது வரை கிட்டதட்ட 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 195 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழப்புகள் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
இத்துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 1000-த்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக மீட்கப்பட்டவர்கள் தெரிவித்த நிலையில், தேடுதல் நடைபெற்று வருகிறது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவ வீரர்கள், கடற்படை குழுவினர், தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய கடலோரக் காவல் படை உள்ளிட்ட பல்வேறு முகமைகள் தேடுதல் மீட்புப் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன. 30 பேர் கொண்ட 10 குழுக்களாக பிரிக்கப்பட்டு இவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விமானப் படை ஹெலிகாப்டர்கள், ராணுவத்தின் மோப்ப நாய்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சகதியிலும், ஆறுகளிலும் உடல் பாகங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. தற்காலிக இரும்பு பாலமும் ராணுவத்தினரால் அமைக்கப்பட்டு நான்காவது நாளாக இன்று மீட்பு பணி தொடர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகள் 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.