வயநாடு நிலச்சரிவு - ரூ.1கோடி நிதியுதவி வழங்கிய மெகா ஸ்டார் சிரஞ்சீவி குடும்பம்!
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகனும் நடிகருமான ராம் சரண் ஆகியோர் ரூ.1கோடி நிதியுதவி வழங்கியுள்ளனர்.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த 29-ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவால் சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளில் இருந்த வீடுகளும் மண்ணால் மூடப்பட்டன. 400 குடும்பங்கள் இந்த நிலச்சரிவில் சிக்கினர். சுமார் 1000த்திற்கும் அதிமானோர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 360க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் தொடர்ந்து 6வது நாளாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவக் குழுக்கள் 500க்கும் மேற்பட்ட வீரர்களுடன், நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட தேயிலைத் தோட்டங்கள் மற்றும் கிராமங்களுக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பக்கத்து மாநில அரசுகள் , சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5கோடி நிதியுதவி வழங்கினார். இந்த நிலையில் தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகனும் நடிகருமான ராம் சரண் ஆகியோர் ரூ.1கோடி வழங்கியுள்ளனர்.