வயநாடு நிலச்சரிவு எதிரொலி: தமிழ்நாடு அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!
தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசுக்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 318 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கிய 1000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 4வது நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வயநாடு நிலச்சரிவு தொடர்பான வழக்கை தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து எடுத்துள்ளது. இந்த வழக்கு தீர்ப்பாயத்தின் நீதிபதி புஷ்பா மற்றும் உறுப்பினர் சத்யகோபால் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மீட்பு பணி, சேத விபரம், இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்வது உள்ளிட்டவை குறித்து கோட்டயம், இடுக்கி, வயநாடு மாவட்ட ஆட்சியர்கள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் உள்ள சுரங்கங்கள், குவாரிகள், சாலைகள், கட்டுமான திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வயநாடு நிலச்சரிவை பாடமாக எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் நீலகிரி, கோவை மாவட்ட ஆட்சியர்கள், தமிழக அரசுக்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கின் விசாரணை செப். 9-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.