வயநாடு நிலச்சரிவு எதிரொலி - ஓணம் கொண்டாட்டங்களை ரத்து செய்தது கேரள அரசு!
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின் எதிரொலியாக மாநில அளவிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த 29-ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவால் சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளில் இருந்த வீடுகளும் மண்ணால் மூடப்பட்டன.
இந்த பேரிடரில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் தேடப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து ஒருவார காலமாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இதன் காரணமாக மாநில அளவிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் காணாமல் போனவர்களைத் தேடுதல், உயிர் பிழைத்தவர்களின் மறுவாழ்வுக்கான முயற்சிகளைக் கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் தங்கள் வீடுகளில் எளிமையான முறையில் ஓணம் பண்டிகையை கொண்டாடுமாறும், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுமாறும் கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. முன்னதாக, நாளை (ஆக.10) நடைபெறவிருந்த நேரு டிராபி படகுப் போட்டியையும் கேரள அரசு ரத்து செய்தது.