வயநாடு நிலச்சரிவு – தேநீர் கடை மூலம் நிதி திரட்டும் DYFI!
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கை, சூரல்மலை பகுதியில் உள்ளவர்களுக்கு 25 வீடுகள் கட்டித் தர இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கேரள மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. இதற்காக அவர்கள் நூதன முறையில் நிதி திரட்டி வருவது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கேரளா மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்தது. இந்த பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி நள்ளிரவில் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி போன்ற கிராமங்களில் அடுத்தடுத்து மூன்று நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த பயங்கர நிலச்சரிவில் ஆயிரக்கணக்கான வீடுகள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தன.
வீடுகள், கட்டிடங்கள், தேயிலைத் தோட்டங்கள் போன்றவை அங்கு இருந்தன என்பதற்கான சுவடே இல்லாமல் போய்விட்டது. இந்த பேரிடரில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் தேடப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து ஒருவார காலமாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலச்சரிவில் இருந்து கேரளா மீண்டு வருவதற்காக தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. பல தன்னார்வல தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கு உறுதுணையாக இருந்து வருகின்றன. பல நடிகர், நடிகைகளும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் முண்டக்கை, சூரல்மலை பகுதியில் உள்ளவர்களுக்கு 25 வீடுகள் கட்டித்தர இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், கேரள மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.