வயநாடு நிலச்சரிவு - காண்போரை கலங்கச் செய்யும் நிலச்சரிவுக்கு முந்தைய மற்றும் பிந்தைய படங்கள்!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி அப்பகுதியே மிக மோசமான நிலையில் உள்ளது. நிலச்சரிவுக்கு முந்தைய மற்றும் பிந்தைய படங்கள் வெளியாகி காண்போரை கலங்கச் செய்துள்ளன.
கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
நேற்று காலை முதலே கனமழை பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில், முண்டகையில் நள்ளிரவு 1 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலையில் பெரிய அளவிலான 2வது நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. நிலச்சரிவில் 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மீட்புக் குழுவினர் அப்பகுதிகளில் மீட்டுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
2 ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி மீட்பு பணியில் ஈடுபடுகின்றனர். முண்டகை மற்றும் அட்ட மலை செல்ல வடம் பயன்படுத்தி தற்காலிக பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பெங்களூர் உட்பட பிற பகுதிகளில் இருந்து நான்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வயநாடு விரைந்துள்ளனர்.
வயநாட்டில் நிலச்சரிவில் நிலைமை இன்னும் மோசமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடும் மழையிலும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிலச்சரிவில் பட உடல்கள் மண்ணில் புதைந்துள்ளதால் அவற்றை மீட்பது கடும் சிரமமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நிலச்சரிவிற்கு முன் எடுக்கப்பட்ட படங்களும், நிலச்சரிவிற்கு பின்னர் எடுக்கப்பட்ட படங்களும் தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன. இயற்கை எழில் கொஞ்சும் வயநாட்டின் பல பகுதிகள், வீடுகள், மரங்கள் , மனிதர்கள் என அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் காண்போரை கண்கலங்கச் செய்கிறது.