வயநாடு நிலச்சரிவு - நான்காம் நாள் மீட்புப்பணியில் 4 பேர் உயிருடன் மீட்பு!
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு நான்காவது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 318 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கிய 1000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 4வது நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் படவெட்டி குன்னு என்ற இடத்தில், வசிந்து வந்த தங்களது உறவினர்களை காணவில்லை என மீட்புப் படையினரிடம் சிலர் தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து, ராணுவ வீரர்கள் அங்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சேற்றில் சிக்கிக்கொண்டிருந்த இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் என 4 பேரை நவீன இலகு ரக ஹெலிகாப்டர் மூலம் மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர்.
மக்கள் கூறியதை கேட்டு ராணுவத்தினர் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டதால் 4 உயிருடன் மீட்கப்பட்டதற்கு பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். மீட்கப்பட்டவர்களில் ஒரு பெண்ணுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை கிடைக்க ராணுவ வீரர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.