வயநாடு நிலச்சரிவு - தமிழ்நாட்டைச் சேர்ந்த 24 பேர் உயிரிழப்பு! 25 பேர் மாயம்!
வயநாடு நிலச்சரிவில் தற்போது வரை தமிழ்நாட்டை சேர்ந்த 24 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 29ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து மூன்று நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவால் சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளில் இருந்த வீடுகளும் மண்ணால் மூடப்பட்டன. 400 குடும்பங்கள் இந்த நிலச்சரிவில் சிக்கின.
இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக தொடர்ந்து 5-வது நாளாக மீட்பு படையினர் முழு வீச்சில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
தற்போதுவரை 1000-க்கும் அதிமானோர் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தோண்ட தோண்ட சடலங்கள் வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. கனமழை தொடர்ந்து வருவதால் சாலைகள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. இதனால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் விவரங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, வேலை நிமித்தமாக கேரளா சென்ற 3 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். 3 பேர் மாயமாகியுள்ளனர். ஒருவர் நிவாரண முகாமில் உள்ளார். வயநாட்டில் நிரந்தரமாக குடியேறியவர்களில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 22 பேர் மாயமாகியுள்ளனர். 129 பேர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.