வயநாடு நிலச்சரிவு: 205 உடல் பாகங்கள் கண்டெடுப்பு!
வயநாடு நிலச்சரிவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளில் 205 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள் முற்றிலுமாக மண்ணுக்குள் மூழ்கின. இந்த பேரிடரில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். இதையடுத்து அவர்களை தேடும் பணியில் ராணுவ வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார், தன்னார்வலர்கள் என 11 பேர் கொண்ட குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
ராணுவப் படையினரும் தங்களின் தேடுதல் பணியை கடந்த 9-ம் தேதி முடித்துக் கொண்டு திரும்பினர். அதே நேரத்தில் மாயமான 100- க்கும் மேற்பட்டவர்களை கண்டுபிடிக்க வேண்டி இருப்பதால் மற்ற பிரிவுகளை சேர்ந்த மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் உதவியுடன் கடந்த 9-ம் தேதி முதல் தேடுதல் பணிகள் நடந்து வருகிறது. இதுவரை 126 பேர் கண்டுபிடிக்கப்படவில்லை. 1000த்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த மீட்புப் பணிகளில் தற்போது வரை 200க்கும் மேற்பட்ட உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன் தெரிவித்துள்ளார். அடுத்து வரும் நாட்களில் ஆற்றங்கரையோர பகுதிகளில் மீட்புக்குழுக்கள் தேடுதல் பணியில் ஈடுபடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.