வயநாடா? ரேபரேலியா? : ராகுல் காந்தி ராஜினாமா செய்யும் தொகுதி 4நாட்களுக்குள் அறிவிக்கப்படும் - காங்கிரஸ்!
ராகுல் காந்தி ராஜினாமா செய்யும் தொகுதி குறித்த அறிவிப்பு 4நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 232 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் மட்டும் தனித்து 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டிலுமே அபார வெற்றி பெற்றார்.
18வது மக்களவை கூட்டத் தொடர் வருகிற ஜூன் 18ம் தேதி தொடங்க உள்ள நிலையில் ராகுல் காந்தி ராஜினாமா செய்யும் தொகுதி குறித்து அடுத்த நான்கு நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.