துயரத்தில் வயநாடு...தமிழர்களின் நிலை என்ன?
வயநாடு நிலச்சரிவில், இதுவரை தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 30 பேர் மாயமாகி இருக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் (ஜுலை 29) வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டு, தற்போது வரை கிட்டதட்ட 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகள் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
இத்துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முழுவதும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில், நள்ளிரவில் நிறுத்தி வைக்கப்பட்டன. தொடர்ந்து இன்று மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1000த்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக மீட்கப்பட்டவர்கள் தெரிவித்த நிலையில், தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவ வீரர்கள், கடற்படை குழுவினர், தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய கடலோரக் காவல் படை உள்ளிட்ட பல்வேறு முகமைகள் தேடுதல்-மீட்புப் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். விமானப் படை ஹெலிகாப்டர்கள், ராணுவத்தின் மோப்ப நாய்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ஏற்கனவே நேற்று (ஜூலை 30) தமிழ்நாட்டை சேர்ந்த காளிதாஸ் என்பவர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்தார். தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் கூடலூர் ஜெயங்கொல்லி பகுதியைச் சேர்ந்த கல்யாண்குமார் (60) என்பவரின் உடல் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டது. அதேபோல், நிலச்சரிவில் சிக்கி ஷிஹாபுதீன் ஃபைஸி என்ற தமிழர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடலூர், சேரம்பாடி பகுதியை சேர்ந்த இவரது உடல் சடலாக மீட்கப்பட்டுள்ளது.