தர்பூசணி சர்ச்சை - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் குமார் பணியிட மாற்றம்!
தமிழ்நாட்டில் கோடை வெயில் அதிகரித்துள்ளதையொட்டி, தர்பூசணி பழங்கள் விற்பனை களைகட்டியது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்பூசணியில் ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் கூறியிருந்தார்.
இது சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அச்சமடைந்த மக்கள் தர்பூசணி வாங்குவதையோ சாப்பிடுவதையோ தவிர்த்து வந்தனர். இதன் காரணமாக விவசாயிகள் பெரும் பாதிப்படைந்தனர்.
இதனிடையே, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிகாரிகளை கண்டித்தும், சென்னை கோயம்பேட்டில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் தலைமையில் கடந்த வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பழ வியாபாரிகள், தர்பூசணி பழங்களை கீழே போட்டு உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து 'ஒரு டன் தர்பூசணி ரூ.10,000-க்கு மேல் விற்பனையான நிலையில், உணவுத் துறை அதிகாரிகளின் தவறான தகவல்களால், தற்போது ஒரு டன் தர்பூசணி ரூ. 2,000-க்கு விற்பனை ஆகிறது. இதற்கு முதலமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமார், விளக்கம் அளித்துள்ளார். அப்போது, "சென்னையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் ரசாயனம் கலந்த கலப்படமிக்க தர்பூசணி பழங்கள் (அடர்சிவப்பு பழங்கள்) கண்டுபிடிக்கப்படவில்லை. அதே நேரம், சோதனையின்போது பல கடைகளில் கெட்டுபோன, எலி கடித்த, அழுகிப்போன பழங்கள் ஏராளமாகக் கிடைத்தன.
அவற்றையெல்லாம் பறிமுதல் செய்து அழித்துவிட்டோம். எனவே பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை. உணவு பாதுகாப்புத் துறை எந்த வகையிலும் விவசாயிகளுக்கு எதிரி இல்லை. யாரோ ஒரு சிலர் தவறான தகவல்களை பரப்பி வருவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமாரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பணியிட மாற்றம் செய்யப்பட்ட சதீஷ் குமார் தமிழ்நாடு மருந்து நிர்வாகத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றும், திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாபுத்துறை அதிகாரி போஸ் கூடுதலாக சென்னை மாவட்ட பொறுப்புக்களை கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.