பெட்ரோலுடன் தண்ணீர்... ஆடுதுறை பங்கில் பகீர் சம்பவம்... வாகன ஓட்டிகள் அதிர்ச்சி...
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை சங்கடி அருகே உள்ள எச்பி பெட்ரோல் பங்கில் பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து வந்தது வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை சங்கடி அருகே உள்ள எச்.பி பெட்ரோல் பங்கில் கடந்த 9-ம் தேதி சான்ட்ரோ காருக்கு காலை 8:58 மணியளவில் ரூ. 2 ஆயிரத்திற்கு பெட்ரோல் போட்டுள்ளனர். பெட்ரோல் போட்ட கார் பங்கிலிருந்து சுமார் 100 அடி தூரத்திற்கு சென்ற நிலையில் இன்ஜின் செயல்படாமல் நின்றது.
பலமுறை முயற்சி செய்தும் கார் இஞ்சின் ஸ்டார்ட் ஆகவில்லை. இதனால் காரை சாலையோரம் நிறுத்தி விட்டு மெக்கானிக்கை அழைத்து பார்த்தனர். பலமுறை கார் இஞ்சினை ஸ்டார்ட் செய்து பார்த்தும் தொடர்ந்து அதில் பவர் சப்ளை குறைந்தது. அதற்கான உபகரணங்களை புதிதாக வாங்கி மாற்றியும் இஞ்சின் ஸ்டார்ட் ஆகவில்லை.
இதனால் குழம்பிப் போன மெக்கானிக் மற்றும் டிரைவர் காரணம் தெரியாமல் இருந்த
நிலையில் இன்ஜின் பகுதியில் வந்த பெட்ரோல் நிறம் மாறி இருப்பதை கண்டனர். உடனே காரில் சுமார் 6 லிட்டருக்கு மேலாக இருந்த பெட்ரோல் முழுவதையும் கேனில் பிடித்து பார்த்துளளனர். அதில் பெட்ரோலில் பெருமளவில் தண்ணீர் கலந்திருப்பது தெரியவந்தது.
இதையும் படியுங்கள்: ராமநாதபுரத்தில் இயங்கி வரும் மதுரை எய்ம்ஸ் கல்லூரியை மதுரைக்கு மாற்ற முடிவு!
இது தொடர்பாக ஆடுதுறை எச்பி பெட்ரோல் பங்கில் கேட்டதுடன், இது குறித்து பங்கு நிர்வாகப் பொறுப்பாளரிடம் போன் மூலம் தெரிவித்தனர். பங்க் உரிமையாளர் சுமார் 3 மணி நேரம் வாடிக்கையாளர்களை காத்திருக்க வைத்து விட்டு நேரில் வந்தார். எத்தனால் 20% கலந்து தரப்படுவதால் இந்த நிலை வருகிறது என்று புலம்பினார்.
வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு உரிய பதில் எதுவும் தராமல்
அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று அலட்சியமாக கூறியுள்ளார். எங்களுக்கே குறைந்த லாபம் தான் கிடைக்கிறது. வேண்டுமானால் பெட்ரோலுடன் தண்ணீர் உள்ளதை வீடியோ வெளியிடுங்கள்.
கோர்ட்டுக்கு போய்க் கொள்ளுங்கள். என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் என்று கூறிவிட்டு தமது காரில் ஏறி புறப்பட்டு சென்றார். இது குறித்து திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜாஃபர் சித்திக் மற்றும் போலீசாரிடம் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.