நெல்லையை தொடர்ந்து கன்னியாகுமரியில் கழிவுகள் கொட்ட முயற்சி - இருவர் கைது!
கேரளாவில் இருந்து ஹோட்டல் கழிவுகளை ஏற்றி கன்னியாகுமரி மாவட்டத்திற்குள்
நுழைய முயன்ற இரு வாகனங்கள் பறிமுதல், இருவர் கைது செய்யப்பட்டனர்
கேரளாவின் இறைச்சி மற்றும் மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் இந்த வார தொடக்கத்தில் நெல்லையில் கேரளக் கழிவுகள் மூட்டை, மூட்டையாக கொட்டப்பட்டு இருந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்படி மருத்துவ கழிவுகளை கேரள அரசே அப்புறப்படுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதையடுத்து கேரளா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், நெல்லையில் நேரில் வந்து ஆய்வு நடத்தினர்.அதன் பின்னர் எல்லைப் பகுதிகளில் மருத்துவக் கழிவுகளை நள்ளிரவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தமிழக எல்லையை தாண்டி அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று கேரளாவில் இருந்து ஹோட்டல் கழிவுகளை ஏற்றி கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் தமிழக பதிவெண் கொண்ட கன்டையினர் லாரி மற்றும் செப்டிக் டேங்க் வேஸ்ட் ஏற்றி வந்த வாகனம் என இரண்டு வாகனங்கள் நுழைய முயன்றது. இதனை கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் இரு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இந்த வாகனங்களை ஓட்டி வந்த திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்ட தேவா (25) ,வள்ளி முருகன் (43) ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.