“விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கியது கண்காணிப்பதற்காகவா?” - அமைச்சர் ரகுபதி கேள்வி!
புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “ அண்ணா அறிவாலயத்தில் நுழைய கூட முடியாது. நாங்கள் அனுமதித்தால் தான் அண்ணாமலை உள்ளே வர முடியும். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கியதில் மாநில அரசை மத்திய அரசு ஆலோசனை செய்ய வேண்டும் என்று அவசியம் கிடையாது. இது சோதனைக்காகவா? யார் யார் வருகிறார்கள் என்று கண்காணிப்பதற்காகவா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
செங்கோட்டையன் தனது மன வருத்தத்தை தான் தற்போது பேசி வருகிறார். அவரை திமுக இயக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. அதிமுக கட்சி என்பது இதோடு முடிந்துவிட்டது. 2026 தேர்தலில் பாஜக வாக்கு சதவீதம் எவ்வளவு என்று தெரியவரும். சாதி வாரி கணக்கெடுப்பு என்பது மத்திய அரசுதான் எடுக்க வேண்டும் மாநில அரசு எடுப்பதால் எந்தவித பயனும் இல்லை. ஏற்கனவே எடுத்த மாநிலங்களில் இந்த கணக்கெடுப்பு மூலம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருக்கிறது. எனவே மத்திய அரசு சாதி வாரி கணக்கெடுப்பு எடுத்தால் தான் செல்லுபடியாகும்.
வேல்முருகன் திமுக சின்னத்தில் இன்று வெற்றி பெற்று எம்எல்ஏ ஆக உள்ளார். அவர் கேட்கும் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. எனவே அவர் திமுக கூட்டணியை விட்டு போக மாட்டார் என்று நம்பிக்கை உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகைகள் மற்றும் உடைமைகள் பெங்களூர் நீதிமன்றத்தில் இருந்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் நீதிமன்ற உத்தரவுபடி ஒப்படைக்கப்பட்டு வருகிறது. அவை முறையாக தமிழ்நாட்டிற்கு வந்த பின்னர் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும். பொது ஏலம் விடப்படுமா? அல்லது வேறு என்ன செய்வது என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
2021 ஆம் ஆண்டு பிரசாந்த் கிஷோரால் நாங்கள் வெற்றி பெறவில்லை. எங்களுடைய களப்பணி தான் வெற்றி பெற செய்தது அவர் அதற்கான வியூகங்களை அமைத்தார். திமுக கட்டமைப்பு வலுவாக இருப்பதால் நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்று வருகிறோம். திமுக செயல் பெண்களுக்கு அதிகமான பாதுகாப்புகள் உள்ளது. புகார் அளிக்க அதனால் தான் பெண்கள் தைரியமாக முன் வருகிறார்கள்
அதிமுக தொண்டர் இரட்டை இலையைத் தவிர வேறு யாருக்கும் வாக்களிக்க மாட்டார்கள். ஆனால் நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வாக்கு திமுகவிற்கு வந்துள்ளது. அதிமுக தொண்டர்களுக்கு மன மாற்றம் வந்துள்ளது, அதை நாங்கள் வரவேற்கிறோம். அதிமுக தலைமை சரி இல்லை என்று அக்கட்சிநிர்வாகிகள் உணர்ந்து விட்டனர் ”
இவ்வாறு அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார்.