பஞ்சாபில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய நபர் வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டாரா?
This News Fact Checked by ‘AajTak’
குடியரசு தினத்தன்று, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் சிலை மீது ஏறி ஒருவர் அதை உடைக்கத் தொடங்கினார், இதன் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. பஞ்சாபின் பல்வேறு பகுதிகளில் இந்த சம்பவத்திற்கு எதிராக பெரும் போராட்டம் நடைபெற்றது (செய்தி தொகுப்பு).
இதற்கிடையில், வழக்கறிஞர்கள் ஒருவரை அடிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இதைப் பகிர்பவர்கள், வழக்கறிஞர்களால் தாக்கப்பட்ட நபர்தான் அமிர்தசரஸில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர் என்று கூறுகிறார்கள்.
இந்த காணொளியை ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட ஒரு இன்ஸ்டாகிராம் பயனர், “அமிர்தசரஸில் பாபாசாகேப்பின் சிலையை சேதப்படுத்திய மனுவாதி நீதிமன்றத்தில் ஆஜரானபோது தாக்கப்பட்டார்” என்று பகிர்ந்துள்ளார். அத்தகைய ஒரு பதிவின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
வைரலாகும் காணொளிக்கும் அமிர்தசரஸில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை ஆஜ் தக் உண்மைச் சரிபார்ப்பு கண்டறிந்துள்ளது. சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் ஒரு மூத்த வழக்கறிஞர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய குற்றவாளி விசாரணையின் போது தாக்கப்பட்ட சம்பவத்தின் காணொளி இது.
உண்மை சரிபார்ப்பு:
வைரலான காணொளியின் முக்கிய சட்டகங்களைத் தலைகீழாகத் தேடியபோது, அது ஜனவரி 18, 2025 அன்று யூடியூப்பில் பதிவேற்றப்பட்டது கண்டறியப்பட்டது. அதாவது இது ஜனவரி 26 அன்று அமிர்தசரஸில் நடந்த சம்பவத்திற்கு முந்தைய காணொளி. இது ராய்ப்பூர் நீதிமன்றத்தின் காணொளி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தகவலின் அடிப்படையில் தேடியபோது, ராய்ப்பூரில் இந்த வழக்கு தொடர்பான பல செய்தி அறிக்கைகள் கிடைத்தன. டைனிக் பாஸ்கரின் செய்தியின்படி, வழக்கறிஞர்களால் தாக்கப்பட்ட நபர் மீது மூத்த வழக்கறிஞர் திர்கேஷ் சர்மாவைக் கொலை செய்ய முயன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஜனவரி 16ம் தேதி, குற்றம் சாட்டப்பட்ட அஜய் சிங் திர்கேஷ் மீது கத்திகள் மற்றும் கற்களால் தாக்குதல் நடத்தினார். தகவல்களின்படி, அஜய் தனது உறவினரான முகேஷ் சிங்குடன் நீண்டகாலமாக தகராறு செய்து வந்தார். இந்த வழக்கை திர்கேஷ் சர்மா நடத்தி வந்தார். இதன் காரணமாக, அஜய் சிங் திர்கேஷ் மீது கத்திகள் மற்றும் கற்களால் தாக்குதல் நடத்தினார்.
ஜனவரி 17ம் தேதி விசாரணைக்காக குற்றம் சாட்டப்பட்ட அஜய் சிங்கை போலீசார் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோது, கோபமடைந்த வழக்கறிஞர்கள் போலீஸ் பாதுகாப்பையும் மீறி அவரைச் சூழ்ந்து கொண்டு அடிக்கத் தொடங்கினர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமர் உஜாலாவின் ஜனவரி 19 செய்தியின்படி, இந்த வழக்கில் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமிர்தசரஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் யார்?
ஜனவரி 26 ஆம் தேதி அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு அருகில் உள்ள அம்பேத்கர் சிலையை உடைக்க முயன்றவரின் பெயர் ஆகாஷ்தீப் சிங் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஆகாஷ்தீப் ஏணியில் சிலையின் மீது ஏறி, சுத்தியலால் சிலையை உடைக்க முயன்றார். தகவல்கள்படி, ஆகாஷ்தீப் பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் உள்ள தரம்கோட்டில் வசிப்பவர்.
இதன்மூலம், ராய்ப்பூரில் ஒருவர் தாக்கப்பட்ட காணொளியை அமிர்தசரஸில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய சம்பவத்துடன் இணைப்பதன் மூலம் குழப்பம் பரப்பப்படுகிறது என்பது தெளிவாகிறது.
Note : This story was originally published by ‘AajTak’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.