சந்தீப் வாரியர் காங்கிரஸில் இணைந்ததற்கு ஷாமா முகமதுதான் காரணமா? - வைராகும் செய்தி போலி என #FactCheck ல் நிரூபணம்!
This news Fact Checked by ‘IndiaToday’
சந்தீப் வாரியருக்கும் ஷாமா முஹம்மதுவுக்கும் இடையேயான காதல் காரணமாகத்தான் அவர் காங்கிரஸில் இணைந்தார் என சமூக வலைதளங்களில் நியூஸ் 24 சேனலின் ஸ்கிரீன்ஷாட் பரவியது. இதுகுறித்த உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.
கேரள மாநில பாஜகவிலிருந்து விலகிய சந்தீப் வாரியர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது தொடர்பான பல்வேறு விமர்சனங்களும் பொய்ச் செய்திகளும் சமூக வலைதளங்களில் பரவின. சந்தீப் வாரியர் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததற்கு காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான ஷாமா முகமதுதான் காரணம் என பதிவுகள் வைரலானது. சந்தீப் வாரியருக்கும் ஷாமா முகமதுவுக்குமான காதல்தான் அவரை காங்கிரஸ் கட்சியில் இணைத்ததாகவும் பரப்பப்பட்டது.
24 நியூஸ் சேனலின் லோகோ உள்ள ஒரு நியூஸ் கட்டிங் ஸ்கிரீன்ஷார் ஷாமா மற்றும் சந்தீப் வாரியரின் படங்களுடன் வைராலனது. " சந்தீப் வாரியரின் காங்கிரஸ் பிரவேசத்திற்கு காரணம் காங்கிரஸ் தலைவர் ஷாமா முகமதுவுடனான காதல்தான். இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர் " என முகநூல் பதிவை சிலர் பரப்பினர். இதுகுறித்து இந்தியா டுடே நடத்திய விசாரணையில், அந்த ஸ்கிரீன் ஷாட் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது. 24 செய்திகள் அத்தகைய செய்தி எதுவும் வெளியிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
உண்மை சரிபார்ப்பு :
வைரலான ஸ்கிரீன்ஷாட்டில், ஷாமா முஹம்மதுவின் படம் எடிட் செய்யப்பட்டுள்ளதால் இது போலியானதாக இருக்கலாம் என்று சந்தேகித்தோம். அதன்படி ஸ்கிரீன்ஷாட்டில் உள்ள முக்கியமான வார்த்தைகளை கூகுள் தேடலுக்கு உட்படுத்தியபோது அதுகுறித்த செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை. 24 நியூஸ் இணையதளத்தில் அப்படி எந்த செய்தியும் வெளியிடவில்லை என்பது இதன்மூலம் உறுதியானது.
இதன் பின்னர் 24 நியூஸ் இணையதளத்தில் வைரலான ஸ்கிரீன்ஷாட்டையும் மற்றொரு செய்தியையும் ஒப்பிட்டுப் பார்த்தோம். வைரலான ஸ்கிரீன்ஷாட்டில் 24 செய்திகளில் காணப்படும் தலைப்புக்கு மேலே உள்ள வகைப் பிரிவு, அதற்கு மேலே உள்ள விளம்பரப் பிரிவு அல்லது கீழே உள்ள 'Google செய்திகளைப் பின்தொடரவும் போன்ற ' பிரிவு இல்லை. இந்த ஒப்பீட்டு படத்தை கீழே காணலாம்.
மேலும் இந்த செய்தியின் உண்மையை அறிவதற்காக 24 நியூஸ் சேனலில் ஆன்லைன் ஆசிரியர் ஏபி. தாரகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். "பரப்பப்படும் ஸ்கிரீன் ஷாட் போலியானது என்றும் 24 செய்திகள் அத்தகைய செய்தியை வெளியிடவில்லை," என்று அவர் இந்தியா டுடேவிடம் தெரிவித்தார்.
மேலும் சந்தீப் வாரியர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தது தொடர்பான செய்திகளையும் சரிபார்த்தோம். பாஜக தலைமையுடன் ஏற்பட்ட பிரச்னையால் சந்தீப் வாரியர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சிக்கு சென்றதாக ஏசியாநெட் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதேபோல பாலக்காடு தொகுதி மறுக்கப்பட்டதாலும், கட்சியில் இருந்து புறக்கணிக்கப்பட்டதாலும் சந்தீப் வாரியர் காங்கிரஸில் இணைந்தார் என்றும் அந்த செய்தி அறிக்கை கூறுகிறது.
இதேபோல மீடியா ஒன் , 24 நியூஸ் , ரிப்போர்ட்டர் டிவி மற்றும் தி ஃபோர்த் ஆகியவையும் சந்தீப் வாரியர் காங்கிரஸில் இணைவது தொடர்பான செய்திகளை வெளியிட்டுள்ளன . இந்தச் செய்திகள் அனைத்திலும் சந்தீப் வாரியர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்ததற்குக் காரணம் பாஜக தலைமை தொடர்பான பிரச்சனைகள்தான் என்பது தெளிவாகிறது.
சந்தீப் வாரியர் காங்கிரசில் இணைவது தொடர்பான வீடியோவை 24 செய்திகள் பகிர்ந்துள்ளனர். அதில் சந்தீப் காங்கிரஸில் இணைந்த பிறகு பாஜகவை கடுமையாக விமர்சித்தார். சந்தீப்பின் பதிலைக் கொண்ட 24 நியூஸின் வீடியோ அறிக்கையை கீழே காணலாம்.
முடிவு:
சந்தீப் வாரியருக்கும் ஷாமா முஹம்மதுவுக்கும் இடையேயான காதல் காரணமாகத்தான் அவர் காங்கிரஸில் இணைந்தார் என சமூக வலைதளங்களில் நியூஸ் 24 சேனலின் ஸ்கிரீன்ஷாட் பரவியது. உண்மைச் சரிபார்ப்பின்படி புழக்கத்தில் இருக்கும் ஸ்கிரீன்ஷாட் போலியானது என்பது உறுதியாகியுள்ளது. மேலும் 24 செய்திகள் அத்தகைய செய்தி எதுவும் வெளியிடவில்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
Note : This story was originally published by ‘IndiaToday’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.