மஹா கும்பமேளாவில் ஏற்பட்ட தீவிபத்தில் தீயை அணைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லையா? - உண்மை என்ன?
This News Fact Checked by ‘India Today’
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்து வரும் மஹாகும்பத் திருவிழாவின் ஏழாவது நாளான ஜனவரி 19 அன்று, ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது, இதன் விளைவாக பல கூடாரங்கள் எரிந்தன. எல்பிஜி சிலிண்டர்கள் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்த நாள் காலையில் வேறு ஒரு பகுதியில் மற்றொரு தீ விபத்து ஏற்பட்டது. இரண்டு சம்பவங்களிலுமே காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ பதிவாகவில்லை.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு படம் வைரலாகி வருகிறது. அதில் வாளியுடன் ஒரு மனிதன் தீயை அணைக்கிறார். இந்த படத்தைப் பகிர்ந்து, சமூக ஊடக பயனர்கள் கும்பமேளாவில் தீயை கட்டுப்படுத்தும் ஏற்பாடுகள் இல்லை, தீயை அணைக்கும் கருவிகள் கூட இல்லை என்று பதிவிட்டுள்ளார். ஒரு X பயனர் இப்படத்தைப் பகிர்ந்து இவ்வாறு எழுதினார் , “ கும்பமேளாவிற்கான ஏற்பாடுகளில் ரூ.7000 கோடி செலவிடப்பட்டது. இருப்பினும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. கும்பமேளா தளத்தில் தீயை அணைக்கும் கருவிகள் கூட இல்லை. தீயை சமாளிக்க மக்கள் வாளிகளை பயன்படுத்துகின்றனர் இது ஒரு #அவமானம் என எழுதியிருந்தார். அப்பதிவை இங்கே காணலாம் .
உண்மை சரிபார்ப்பு :
இந்தியா டுடே உண்மைச் சரிபார்ப்பில் வைரலானது தவறானது என்று கண்டறிந்துள்ளது. ஜனவரி 19 அன்று நடந்த மகாகும்பத் தீ பற்றிய பல செய்திகளை நாங்கள் கண்டோம். மாலை 4 மணியளவில் அது அணைக்கப்பட்டது. NDTV இன் வீடியோ அறிக்கையில், வைரல் கூற்றுக்கு மாறாக, பல்வேறு தீயணைப்புப் படை வாகனங்கள் தீயை அணைப்பதைக் காணலாம். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் சம்பவ இடத்திற்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
AajTak இன் மற்றொரு செய்தி அறிக்கையில், தேசிய பேரிடர் மீட்புப் படை, காவல்துறை மற்றும் தீயணைப்புப் பாதுகாப்பு அதிகாரிகள் தீயை அணைப்பதைக் காட்டுகிறது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் வைரலான படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தியபோது செய்தி நிறுவனமான ஐஏஎன்எஸ் மூலம் ஒரு வீடியோவைக் கண்டோம். வைரலான படம் இந்த வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்டிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புப் படை வாகனங்களைப் பயன்படுத்தி தீயணைப்பு வீரர்கள் மற்றும் பிற பாதுகாப்புக் குழுக்களுடன் மக்கள் தண்ணீர் வாளிகளைப் பயன்படுத்துவதை முழுமையான வீடியோ காட்டுகிறது.
Prayagraj, Uttar Pradesh: A fire broke out in Mahakumbh Nagar, Sector 19, between Shastri Bridge and the Railway Bridge. The fire has been brought under control, and no casualties have been reported pic.twitter.com/UJEICdVnC4
— IANS (@ians_india) January 19, 2025
UPTak இன் வீடியோ அறிக்கையின்படி , உள்ளூர் மக்களும் கைகோர்த்து தண்ணீரை வாளிகளைப் பயன்படுத்தி தீயைக் கட்டுப்படுத்த முயன்றனர். அதிகாரிகள் சுமார் 30 நிமிடங்களில் தீயை கட்டுப்படுத்த முடிந்ததாகவும், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் பல செய்திகள் குறிப்பிடுகின்றன.
உத்தரபிரதேசத்தில் தீயணைப்பு சேவைகளின் இயக்குநர் ஜெனரல் அவினாஷ் சந்திரா நிருபர்களிடம் கூறியதாவது : 53 தீயணைப்பு நிலையங்கள் மற்றும் 1,300 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 300க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பிரயாக்ராஜ் மாவட்டம் முழுவதும் ஒன்பது தீயணைப்பு நிலையங்கள் உள்ளன” என தெரிவித்தார். இதன் மூலம் வைரலானது முற்றிலும் தவறானது என்பது தெளிவாகிறது.
முடிவு:
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மஹா கும்பமேளாவில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தை கட்டுப்படுத்த மக்கள் தண்ணீர் வாளியை மட்டுமே பயன்படுத்தினர் என்றும் தீயணைப்புத்துறையினர் யாரும் வரவில்லை என பதிவுகள் வைரலானது. இதுகுறித்து ஆய்வுக்கு உட்படுத்தியதில் முற்றிலும் தவறானது என்பது தெரியவந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் செய்திகள் பல முக்கிய ஊடகங்களில் பதிவாகியுள்ளது.
Note : This story was originally published by ‘India Today’and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.