சிரிய அதிபரான பஷர் அல் ஆசாத்தின் உறவினர் பொதுமக்கள் முன்பு தூக்கிலிடப்பட்டாரா? - உண்மை என்ன?
This news Fact Checked by Newsmeter
சிரிய அதிபர் பஷர் அல்- அசாத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து அவரது உறவினரான சுலைமான் ஹிலால் அல் அசாத் தூக்கிலிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. இதுகுறித்த உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.
சிரியாவில் பஷர் அல்-அசாத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த பின்னர், ஒரு நபர் பகிரங்கமாக தூக்கிலிடப்பட்டதைக் காட்டும் குழப்பமான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. வீடியோவைப் பகிர்ந்த பயனர்கள், அசாத்தின் உறவினர் சுலைமான் ஹிலால் அல்-அசாத் சிரியாவில் உள்ள லதாகியாவின் பொதுச் சதுக்கத்தில் தூக்கிலிடப்பட்டதாக எழுதினர். ஒரு X பயனர் "பஷர் அசாத்தின் உறவினர் சுலைமான் ஹிலால் ஆசாத் லதாகியாவின் பொதுச் சதுக்கத்தில் தூக்கிலிடப்பட்டார்" என்ற தலைப்புடன் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
உண்மை சரிபார்ப்பு :
இந்த வீடியோவை ஆய்வு செய்ததில் நியூஸ்மீட்டர் இந்த கூற்று தவறானது என்று கண்டறிந்தது. தூக்கிலிடப்பட்ட நபர், சிரியாவில் உள்ள தாரா கவர்னரேட்டினை சார்ந்த பொதுமக்களில் ஒருவரான அம்மார் அல்- அசாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். வைரலான வீடியோவின் ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தியபோது அதன் முடிவில் Haki Hourani என்ற பெயருடைய Facebook கணக்கிற்கு எங்களை அழைத்துச் சென்றது. அது இப்போது வைரலான கிளிப்பைப் போலவே வெவ்வேறு கோணங்களில் இருந்து ஒரு மனிதனை தூக்கிலிடுவதைக் காட்டும் இரண்டு வீடியோக்களை டிசம்பர் 7 அன்று வெளியிட்டது.
இந்த பேஸ்புக் கணஞ்கை மேலும் மதிப்பாய்வு செய்ததில், ஒரு பெண்ணின் மரணதண்டனையைக் காட்டும் இரண்டு கூடுதல் வீடியோக்களைக் கண்டோம். கிழக்கு கிராமமான தாராவில் உள்ள கிர்பெட் கசலே நகரின் பொது சதுக்கத்தில் ஆணும் பெண்ணும் தூக்கிலிடப்பட்டதாக கணக்கு கூறுகிறது. அந்த இளைஞன் முகமது ஜியாத் அல்-ஹாஜ் அலியை கொலை செய்த குற்றவாளி அம்மார் அல்-அசாத் என்றும் பெண் டயானா என்றும் அது அடையாளம் கண்டுள்ளது. டயானா முகமது ஜியாத் அல்-ஹாஜ் அலியின் மனைவி என்றும் கணக்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
வைரலான வீடியோவும் இந்தக் கணக்கின் மூலம் வெளியிடப்பட்ட மற்ற வீடியோக்களும் ஒரே நபரின் மரணதண்டனையை சித்தரிப்பதை என்பதை நாங்கள் உறுதிப்படுத்தினோம். வீடியோக்களில் காணப்படும் ஆடை மற்றும் சுற்றுப்புறம் ஒரே மாதிரியாக உள்ளது.
டிசம்பர் 7 தேதியிட்ட பிற சிரிய கணக்குகளிலிருந்து, இறந்தவரின் மனைவி டயானா , அம்மார் அல்-ஆசாத்துடன் சதி செய்து அவர் வீட்டிற்குள் நுழைவதற்கு வசதி செய்ததாகக் கூறப்படும் பேஸ்புக் பதிவுகளையும் நாங்கள் கண்டறிந்தோம். பின்னர் ஆகஸ்ட் 11, 2024 அன்று தூங்கிக் கொண்டிருந்த முகமது ஜியாத் அல்-ஹாஜ் அலியை அம்மார் தலையில் சுட்டுக் கொன்றார். இந்தக் கொலைக் குற்றம் அடுத்த நாள் வெளிப்பட்டது. குற்றத்தை அம்மார் ஒப்புக் கொண்டதையடுத்து தரா நீதிமன்றம் அம்மாருக்கு மரண தண்டனை விதித்தது. கிர்பெத் கசாலேவில் பெரும் மக்கள் முன்னிலையில் அவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
அந்த இடுகைகளில் அரேபிய மொழியில் பாதிக்கப்பட்டவரின் புகைப்படம் மற்றும் பெயர் அடங்கிய சுவரொட்டியும் இருந்தது. ஹக்கி ஹூரானி என்ற பேஸ்புக் கணக்கு பதிவிட்ட வீடியோக்களில் இதே போஸ்டரைக் கண்டோம் அதே போஸ்டரை ஆகஸ்ட் 24 தேதியிட்ட ஃபேஸ்புக் இடுகையில் கண்டோம், அல்-மஜன்னா வட்டத்தில் கிர்பெத் கசாலேவின் தெற்கு நுழைவாயில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தேடல்கள் 2020 மற்றும் 2021 இல் அல்-மஜன்னா வட்டத்தின் படங்களைக் கொண்ட Facebook இடுகைகளுக்கு எங்களை அழைத்துச் சென்றன.
இதனைத் தொடர்ந்து, முக்கிய வார்த்தைகளைத் தேடினோம். தெற்கு சிரியாவிலிருந்து குறிப்பாக தாரா கவர்னரேட்டிலிருந்து வரும் செய்திகளை உள்ளடக்கிய ஒரு ஊடகமான தாரா 24 நெட்வொர்க் டிசம்பர் 7 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையைக் கண்டறிந்தோம். அறிக்கையின்படி. நவம்பர் 14 அன்று, தாரா கவர்னரேட்டில் உள்ள குற்றவியல் நீதிமன்றம். ஆகஸ்ட் 11 அன்று இரவு முகமது ஜியாத் அல்-ஹாஜ் அலியைக் கொன்றதற்காக அம்மார் அல்-ஆசாத் மற்றும் டயானா ஆகியோருக்கு மரண தண்டனை விதித்தது. அவர்கள் நகரத்தில் தூக்கிலிடப்பட்டனர் என குறிப்பிட்டிருந்தது.
இதன் பின்னர் டிசம்பர் 9 முதல் இரண்டு அரபு அறிக்கைகளையும் நாங்கள் கண்டோம். அதில் வைரலான வீடியோவின் ஸ்கிரீன் கிராப் இடம்பெற்றுள்ளது. இளைஞன் முகமது ஜியாத் அல்-ஹாஜ் அலியின் கொலையில் ஈடுபட்டதற்காக தாரா கவர்னரேட்டில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து அம்மார் அல் ஆசாத் தூக்கிலிடப்பட்டதை வைரல் வீடியோ காட்டுகிறது என்று இரண்டு அறிக்கைகளும் தெரிவித்தன. வெளியேற்றப்பட்ட சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் உறவினருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதை வீடியோ காட்டவில்லை என்றும் அறிக்கைகள் தெளிவுபடுத்தியுள்ளன.
முரண்பட்ட செய்தி அறிக்கைகளால் சுலைமான் ஹிலால் அல்-அசாத்தின் மரணத்தை நியூஸ்மீட்டரால் உறுதிப்படுத்த முடியவில்லை. எவ்வாறாயினும் கிரிமினல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற ஒரு சாதாரண குடிமகன் அம்மார் அல்-அசாத் தூக்கிலிடப்பட்டதை வைரல் வீடியோ காட்டுகிறது என்று எங்கள் விசாரணையில் கண்டறியப்பட்டது. அவர் பஷர் அல்-அசாத்துடன் தொடர்புடையவரா என்பதை எங்களால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.
முடிவு :
நாட்டைவிட்டு தப்பியோடிய சிரிய அதிபர் பஷர் அல்- அசாத்தின் உறவினரான சுலைமான் ஹிலால் அல் அசாத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து தூக்கிலிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. இந்தக் கூற்று பொய்யானது. தாரா கவர்னரேட்டில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட அம்மார் அல்-அசாத் என்ற சாதாரண குடிமகனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வீடியோ தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
Note : This story was originally published by Newsmeter and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.