BRS செயல் தலைவர் K.T.R -ன் படத்தை மார்ஃபிங் செய்ததற்காக காங்கிரஸ் எம்பி போலீசாரால் தாக்கப்பட்டாரா ? - உண்மை என்ன?
This news Fact Checked by ‘Newsmeter’
பிஆர்எஸ் செயல் தலைவர் கேடி ராமாராவின் புகைப்படத்தை மார்பிங் செய்ததற்காக போங்கிர் எம்பி சாமலா கிரண் குமார் ரெட்டி காவல்துறையினரால் தாக்கப்பட்டார் என சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகிறது. இதுகுறித்த உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்
போலீஸ் அதிகாரிகள் ஒருவரை தடியால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமாராவின் புகைப்படத்தை மார்பிங் செய்ததற்காக போங்கிர் தொகுதியின் காங்கிரஸ் எம்பி சாமலா கிரண் குமார் ரெட்டி போலீசார் தாக்குவதாக அந்த வீடியோவைப் பதிவிட்டவர்கள் கேப்சனில் தெரிவித்துள்ளனர். இதேபோல ஒரு திருட்டு வழக்கில் காங்கிரஸ் எம்பி சாமலா கிரண் குமார் ரெட்டி போலீசாரால் தாக்கப்பட்டதாக மற்றொரு X பயனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த உண்மைத் தன்மையை நியூஸ் மீட்டர் ஆய்வுக்கு உட்படுத்தியது.
உண்மை சரிபார்ப்பு :
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவின் கீ ஃபிரேம்களை பிரித்து அதனை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தினோம். அதன் முடிவில் அவை ஜூன் 16, 2022 அன்று ABP லைவ் வெளியிட்ட ஒரு புகைப்படத்தை காட்டியது. அந்த புகைப்படங்களில் ஒன்று வைரலான வீடியோவுடன் நெருக்கமாகப் பொருந்தியது மற்றும் தெலங்கானா மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கிரண் குமார் சாமலா ஒரு போராட்டத்தில் ஈடுபடுவது போல படங்கள் இடம்பெற்றன. வைரல் வீடியோ மற்றும் ஸ்கிரீன்ஷாட்டின் பிரேம்களின் ஒப்பீடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி அறிக்கையின்படி, தெலங்கானா பிரதேச காங்கிரஸ் கமிட்டி (TPCC), அப்போதைய தலைவரான ரேவந்த் ரெட்டி தலைமையிலான போராட்டம் என்பது தெளிவாகிறது. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியை அமலாக்கத்துறை (ED) மூலம் மத்திய அரசு நெருக்கடி கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஏபிபி லைவ் தனது போட்டோ ஸ்டோரிஸில் ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தின் ஸ்கிரீன் ஷாட் என்று குறிப்பிட்டுள்ளது, அங்கு கூட்டத்தைக் கலைக்க காவல்துறை தடியடியை பயன்படுத்தியது. அப்போது TPCC செய்தித் தொடர்பாளராக இருந்த சாமலா கிரண் குமார் ரெட்டி, போலீசாரின் தடியடியின்போது காயமடைந்தார். கிரண் குமார் ரெட்டி காவல்துறையினரால் தாக்கப்பட்ட வீடியோவை முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் பகிர்ந்து காவல்துறையின் நடவடிக்கைகளைக் கண்டித்துள்ளார்.
மேலும் ஜூன் 16, 2022 அன்று, இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர் , " தெலங்கானா பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் கிரண் சாம்லா மீது காவல்துறையினரால் நடத்தப்பட்ட இந்த தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்…" என தெரிவித்துள்ளார். மேலும், கிரண் குமார் ரெட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்களை ரேவந்த் ரெட்டி பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ பதிவு செய்யப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2024 இல் நடைபெற்ற தேர்தலில் சாமலா கிரண் குமார் ரெட்டி தேர்தலில் போட்டியிட்டு போங்கிர் தொகுதி எம்.பி.யானார்.
முடிவு :
பிஆர்எஸ் செயல் தலைவர் கேடி ராமாராவின் புகைப்படத்தை மார்பிங் செய்ததற்காக போங்கிர் எம்பி சாமலா கிரண் குமார் ரெட்டி காவல்துறையினரால் தாக்கப்பட்டார் என பரவும் வீடியோ தவறானது. இந்த வீடியோ பழையது. ஹைதராபாக்கில் நடந்த போராட்டத்தின்போது கிரண் குமார் ரெட்டியை போலீசார் தாக்கும் பழைய வீடியோவை தற்போதையது என பரப்புகிறார்கள்.
Note : This story was originally published by ‘Newsmeter’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.