தென்மாவட்ட கடற்கரைகளுக்கு 'கள்ளக்கடல்' எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் கள்ளக் கடல் நிகழ்வுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு கோடை காலம் தொடங்கியதிலிருந்து கடும் வெப்பம் வாட்டி வதைத்தது. பல இடங்களில் வரலாறு காணாத வெப்பம் பதிவானது. வெப்ப அலையால் சிலர் உயிரிழக்கும் சூழலும் ஏற்பட்டது. இதனை அடுத்து அதற்கு நேர்மாறாக பல இடங்களில் கோடை மழையும் கொட்டித்தீர்த்தது. இதற்கிடையில் உலகம் முழுவதுமே கடல் பரப்பின் வெப்பம் அதிகரித்து காணப்படுபடுவதாக அண்மையில் தனியார் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்தனர். இதனால், இந்த ஆண்டு இறுதியில் அதீத மழை உள்ளிட்ட அசாதரண வானிலை சூழல்கள் ஏற்படலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
இதன்படி, கன்னியாகுமரியில் கடல் அலை 2.3 மீட்டர் முதல் 2.6 மீட்டர் வரை எழும்பக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, ராமநாதபுரம் மாவட்டத்தில் 2.7 முதல் 3 மீட்டர் வரை கடல் எழும்பக்கூடும். திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியை பொறுத்தவரை 2.4 முதல் 2.7 மீட்டர் வரை கடல் அலை எழும்பக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாளை இரவு 11.30 மணி வரை இந்த எச்சரிக்கை தொடரும் எனவும் இந்திய கடல்சார் தகவல் மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.