இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் - மத்தியஸ்தம் வகிக்க விருப்பம் தெரிவித்த சீனா!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழ்ந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் மாறி மாறி நடவடிக்கை எடுத்து வந்தது. முதலில் பாகிஸ்தான் மீது சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, விசா நிறுத்தி வைப்பு, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது.
பதிலுக்கு இந்தியாவுக்கு சொந்தமான விமானங்கள் பாகிஸ்தான் நாட்டு வான் பரப்பில் பறக்க தடை, வர்த்தக நிறுத்தம், இந்தியர்கள் வெளியேற்றம், சிம்லா ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளிடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இருப்பினும் பாகிஸ்தான் அரசு தங்கள் மீது இந்தியா வீண் பழி சுமத்துகிறது என்றும் தாக்குதல் தொடர்பான ஆதாரம் இருந்தால் உலகுக்கு இந்தியா காண்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததையடுத்து இந்த விவகாரத்தில் நடுநிலையான விசாரணை வேண்டும் என்றும் கூறி வருகிறது. அதே வேளையில் இரு நாடுகளும் அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என ஐநா வலிறுத்தியது.
இந்த நிலையில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பாரபட்சமற்ற விசாரணையை ஆதரிக்க சீனா விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியா - பாகிஸ்தானின் தற்போதைய நிலைமையை தணிக்க உகந்த அனைத்து முயற்சிகளையும் சீனா வரவேற்பதாகவும், விரைவில் பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்வதை ஆதரிப்பதாகவும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.