போர் பதற்றம் - மின்தடையால் இருளில் மூழ்கிய எல்லையோர மாநிலங்கள்!
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சம் பெற்ற நிலையில், நேற்றிரவு பாகிஸ்தான் ராணுவத்தினர் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் வீசி இந்தியாவின் எல்லைப்புற நகரங்களாக ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் மீது கடுமையான தாக்குதல் நடத்தினர்.
இதற்கு எதிராக இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் டிரோன்களை அழித்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும் ஜம்மு காஷ்மீரின் உரி எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து சிறிய வகை பீரங்கி மற்றும் துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் இந்த எல்லையோர மாநிலங்களில் மின்தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் முழுமையான மின்தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாபின் ஃபிரோஸ்பூர், ஹரியானாவின் பஞ்ச்குலா, அம்பாலா உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில், ஜம்முவில் மருந்துக்கடைகளும் மூடப்பட்டுள்ளன.