For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தீவிரமடையும் போர்... மத்திய கிழக்கு நாடுகளில் என்னதான் நடக்கிறது?

02:49 PM Oct 02, 2024 IST | Web Editor
தீவிரமடையும் போர்    மத்திய கிழக்கு நாடுகளில் என்னதான் நடக்கிறது
Advertisement

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே மூண்ட போர் தற்போது லெபனான், ஈரான் என பல்வேறு நாடுகள் ஈடுபடும் போராக மாறி நிற்கிறது. இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக இந்த போர் வளர்ந்து வந்ததை பாதையை பார்க்கலாம்.

Advertisement

காஸாவை உருகுலைத்த இஸ்ரேல்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கியது. இதில் காஸா உருக்குலைந்தது. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் அதிரடி தாக்குதல் நடத்தினர்.

உடனே இஸ்ரேலும் பதிலடியை தொடங்கியது. லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் பின்னணியில் ஈரான் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் இஸ்ரேல் படைகள் மீது 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட்களை ஹிஸ்புல்லா ஏவியது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் ஹமாஸ் ஆகியவற்றுக்கு இடையிலான போர் ஒருபுறம் நடந்து வரும் நிலையில், மறுபுறம் லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிரான தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் தீவிரப்படுத்தியது. தனது அதிரடியாக தாக்குதல்களால் கடந்த சில நாட்களில் மட்டும் நூற்றுக்கணக்கான பேரை கொன்று குவித்துள்ளது. இது வளைகுடா நாடுகள் முழுவதிலும் போர் மேகம் சூழும் அபாயத்திற்கு ஆளாக்கியுள்ளது.

லெபனான் மற்றும் ஹமாஸ்-க்கு ஆதரவாக களம் இறங்கிய ஈரான்

இந்நிலையில், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு, பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேலின் டெல் அவிட் நகரின் மீது ஈரான் குண்டு மழை பொழிந்துள்ளது. குறிப்பாக ஜெருசலம், டெல் அவிவ் ஆகிய நகரங்களின் பல்வேறு பகுதிகளில் குண்டுகள் வீசப்பட்டன. இதன் தொடர்ச்சியாக இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் ஒலித்து வருகின்றன. இந்நிலையில், ஈரான் மிகப்பெரிய தவறிழைத்துவிட்டதாகவும், அதற்கு உரிய பதிலடி தரப்படும் என்றும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

இதற்கிடையே இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள காவல்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக களம் இறங்கிய அமெரிக்கா

இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்தார். அதோடு அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்ட பைடன், இஸ்ரேலுக்கு அனைத்து ராணுவ உதவிகளையும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

ஈரானில் வீதியில் இறங்கி கொண்டாடிய மக்கள்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஈரானின் தலைநகரான டெஹ்ரானில் மக்கள் வீதியில் இறங்கி கொண்டாடினர். ஏராளமான மக்கள் ஈரான் மற்றும் ஹெஸ்பொலாவின் கொடிகளை ஏந்தியிருந்தனர். லெபனானில் அண்மையில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட முன்னாள் ஹெஸ்பொலா தலைவர் நஸ்ரல்லாவின் புகைப்படத்தை மக்கள் வைத்திருந்ததை பார்க்க முடிந்தது. இந்தக் கொண்டாட்டம் தொடர்பாக வெளியான புகைப்படங்களின்படி, சிலர் பட்டாசுகளை வெடிக்கிறார்கள்.

லெபனானில் கொண்டாட்டம்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய செய்தி வெளியான பிறகு, லெபனானில் உள்ள ஹெஸ்பொலா உறுப்பினர்கள், பாலத்தீனிய குழுக்கள் மற்றும் ஈரானின் ஆதரவாளர்கள், தலைநகர் பெய்ரூட்டில் பட்டாசு வெடித்தும், துப்பாக்கியால் வானை நோக்கிச் சுட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்த மக்களுக்கு தங்குமிடமாக இருக்கும் ஒரு பள்ளியில் சில கொண்டாட்டங்களை பார்க்க முடிந்தது. இங்கு சிவில் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கேமரா முன்பு ‘V’ (வெற்றி) என்ற அடையாளத்தில் இரண்டு விரல்களை உயர்த்திக் காட்டி "நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்," என்று அவர்கள் கூச்சலிட்டனர்.

உலகெங்கும் பரவும் போரின் தாக்கம்

இப்படி இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலை லெபனான் மக்கள், பாலஸ்தீன மக்கள், ஈரான் மக்கள் கொண்டாடினாலும், அடுத்து என்ன நடக்கும் என்ற அச்சம் அனைத்து தரப்பு மக்களுக்கும் இருக்கிறது என்பதே உண்மை.

இதுமட்டுமல்லாது இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க களத்தில் இறங்குவதால், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழல் உலகம் முழுவதுமே ஒருவித பதற்றத்தை தொற்ற செய்துள்ளது. அங்கு நடக்கும் போர் சர்வதேச அளவில் பங்குசந்தைகளின் ஏற்ற இறக்கங்களுக்கும், அதள பாதாள வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை ஏற்றம் உள்ளிட்ட காரணிகளால், போருக்கு தொடர்பில்லாத நாடுகளை சேர்ந்த மக்கள் கூட மறைமுகமாக கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளிடையே மூண்டுள்ள போர் எப்போது முற்றுபெறும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags :
Advertisement