வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா - நாடாளுமன்ற கூட்டு குழுவிற்கு பரிந்துரை!
அமைச்சர் கிரண் ரிஜிஜு வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டு குழுவிற்கு பரிந்துரை செய்துள்ளார்.
மக்களவையில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று தாக்கல் செய்தார். இதையடுத்து இந்த மசோதா தொடர்பாக பேசிய காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில் அமைச்சர் கிரண் ரிஜிஜு வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டு குழுவிற்கு பரிந்துரை செய்துள்ளார்.
மேலும் மசோதாவை ஆதரித்து அவர் பேசியதாவது;
இந்த மசோதா மூலம், எந்த மத அமைப்பின் சுதந்திரத்திலும் தலையிட முடியாது. அரசியலமைப்பின் எந்த விதியும் மீறப்படவில்லை. யாருடைய உரிமையையும் இது பறிக்காது. உரிமைகளைப் பெறாதவர்களுக்கு உரிமைகளை வழங்குவதற்காக இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட சச்சார் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் இந்த மசோதா இன்று கொண்டு வரப்படுகிறது. இந்த மசோதாவை எதிர்ப்பதை நிறுத்துங்கள். யார் எதிர்த்தாலும், யார் ஆதரித்தாலும் சரி இது வரலாற்றில் இடம்பெறும். மசோதாவை எதிர்க்கும் முன், ஆயிரக்கணக்கான ஏழைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பற்றி சிந்தித்து அவர்களுக்கு மதிப்பு கொடுங்கள்" எனக் கூறினார்.