வக்ஃபு வாரியம்: “2 ஓய்வுபெற்ற நீதிபதிகளை தவிர மற்ற அனைவரும் இஸ்லாமியர்களாகவே இருக்க வேண்டும்” - உச்ச நீதிமன்றம் உத்தரவு!
வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு எதிராக கட்சிகள், தனிநபர் என பலதரப்பில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 100க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
திமுக, காங்கிரஸ் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்து உள்ளன.
தலைமை நீதிபதி:-
அனைத்து மனுதாரர்களின் கோரிக்கைகளும் கேட்கப்படும். ஒவ்வொருவருக்கும் வாதிட வாய்ப்பு வழங்கப்படும். இந்த வழக்கின் சாரம் மற்றும் வாதக் குறிப்புகள் தொடர்பாக முதலில் எடுத்துரைக்க வேண்டும். இது வழக்கின் முதல்கட்ட விசாரணையே. எனவே வாதத்தின் முக்கிய விஷயத்தை எடுத்து வைக்க வேண்டும். பட்டியலிடப்பட்ட மனுக்கள் மட்டுமே விசாரணைக்கு எடுக்கப்படும்.
மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்
ஒவ்வொரு மத பிரிவினரும் அவர்களது விவகாரங்களை கையாள அரசியல் அமைப்பு அதிகாரம் வழங்கியுள்ளது. அதன் வகையில் அவர்களது சொத்து, நிறுவனங்கள், ட்ரஸ்ட் உள்ளிட்டவற்றை சட்டப்படி நிர்வகிக்க அந்த அமைப்பு அல்லது மத குழுக்களுக்கு அதிகாரம் உள்ளது.
தலைமை நீதிபதி:-
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமா அல்லது சம்பந்தப்பட்ட மாநில உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பலாமா?. இரண்டாவது கேள்வி, ஒவ்வொரு மனுதாரர்களும் எந்த புள்ளியில் வாதத்தை முன் வைக்க உள்ளீர்கள்?.
இரண்டாவது கேள்விக்கு மனுதாரர்கள் தரப்பு அளிக்கும் பதிலை பொறுத்து முதல் கேள்வியை முடிவு செய்யலாம்.
கபில் சிபல்:-
ஒரு சொத்தை வக்ஃபுவுக்கு வழங்க வேண்டும் என்றால் ஒருவர் 5 ஆண்டு இஸ்லாம் மதத்தை பின்பற்ற வேண்டும் என புதிய சட்டம் கூறுகிறது. ஆனால் அரசியல் சாசனம் ஒரு மதத்தை பின்பற்ற சுதந்திரம் வழங்கியுள்ளது. ஒவ்வொரு மத நிறுவனங்களுக்கும், அறக்கட்டளைகளுக்கும் தனித்தனி அதிகாரங்கள் உள்ளன. எந்த ஒரு சட்டமும் அரசியல் சாசன பிரிவு 25, 26க்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
மேலும் ஒரு மத சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்த சட்டம் உள்ளது.
தலைமை நீதிபதி :-
ஒரு சட்டத்தை இயற்ற நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. ஒருவரின் நலனுக்காக சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது. அது இஸ்லாம், இந்து என அனைத்து மதத்துக்கும் பொருந்துமே.
கபில் சிபல்:-
ஆனால் அவ்வாறு இயற்றப்படும் சட்டம் மக்களின் வளர்ச்சிக்காக இருக்க வேண்டுமே. ஆனால் இந்த விவகாரத்தில் அனைத்தும் எதிர் மறையாக உள்ளது. இஸ்லாமிய மத உரிமைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை. இஸ்லாம் வாரிசு உரிமை என்பது மரணத்துக்கு பிறகுதான். அதற்கு முன்பாக யாரும் தலையிட முடியாது.
எந்த ஒரு சொத்தையும் வக்ஃபு சொத்து என்று அறிவிக்க முடியாது. அதற்கு என்று வழிமுறைகள், விதிமுறைகள் உள்ளன. குறிப்பாக எந்த பழங்குடியின மக்களின் சொத்தையும் வக்ஃபு சொத்து என அறிவிக்க முடியாது. மேலும் ஒரு மதக்குழுவின் சொத்து, நிறுவனங்களை நிர்வகிக்க அந்த குழுக்களை சேர்ந்தவர்களே நிர்வாகியாக இருக்க வேண்டும்.
வக்ஃபு உறுப்பினர்களாக இதுவரை இஸ்லாமியர்களே இருந்து வருகின்றனர். இந்து மற்றும் சீக்கிய அமைப்புகளிலும் அதே நடைமுறை தான் பின்பற்றப்படுகிறது. இது 20 கோடி இஸ்லாமிய மக்களின் நம்பிக்கை சார்ந்தது. ஆனால் புதிய சட்டத்திருத்தத்தில் யாரை வேண்டுமானாலும் நிர்வாக உறுப்பினராக நியமிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. வக்ஃபு வாரியத்தில் பிற மதத்தினரை நிர்வாகிகளாக நியமிப்பது என்பது நேரடி விதிமீறல் ஆகும்.
1995 வக்ஃபு சட்டம் இஸ்லாமியர்களால் நிர்வகிக்க அதிகாரம் வழங்கி உள்ளது. அதனை முழுமையாக மாற்றும் விதமாக தற்போதைய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் வக்ஃபு சொத்துக்கள் மீது முடிவு செய்வது என்பது நீதித்துறை முடிவாகாது.
அபிஷேக் சிங்வி :-
சுமார் 8 லட்சத்துக்கும் மேலான வக்ஃபு சொத்துக்கள் உள்ளன. அதனை மொத்தமும் கையகப்படுத்தும் வகையிலேயே தற்போதைய சட்டத் திருத்தம் உள்ளது.
தலைமை நீதிபதி :-
டெல்லி உயர் நீதிமன்றம் உள்ளிட்ட பல அரசு சொத்துக்களை வக்ஃபு சொத்துக்கள் என கூறுவது எப்படி?.
அபிஷேக் சிங்வி :-
நாடாளுமன்ற கட்டிடம் கூட வக்ஃபு சொத்து என கூறுகின்றனர். இது அனைத்தும் கட்டமைக்கப்பட்ட கதை. அவ்வாறு எதை வேண்டுமானாலும் வக்ஃபு சொத்து என உரிமை கோர முடியாது. மேலும் சில விசயத்தில் பிரச்சனைகள் உள்ளன என்பதை மறுக்க முடியாது. அதற்காக அனைத்தையும் குறைகூறுவதை ஏற்க முடியாது.
3000 ஆண்டுகளுக்கு முன்பு வக்ஃபு சொத்து உருவாக்கப்பட்டால் அதற்கு பத்திரத்தை காண்பிக்கும் நிலை தற்போது உருவாகி உள்ளது. பல வக்ஃபு சொத்துக்கள் பதிவு செய்யப்படாதவை. வக்ஃபு என்பது மிக மிக பழமையானது. இது அயோத்தியா வழக்கு தீர்ப்பிலும் விவாதிக்கப்பட்டுள்ளது. வக்ஃபு சொத்து எவை என்பதை ஆட்சியர்கள் முடிவு செய்வது இயலாத காரியம். அதில் பல பிரச்னைகள் உள்ளன.
5 ஆண்டுகள் மதத்தை பின் பற்றினால்தான் நன்கொடை வழங்க முடியும் என்பது ஏற்புடையது அல்ல. இது தனி உரிமைகளுக்கு எதிரானது. வக்ஃபு சட்ட விவகாரம் நாடு முழுதும் பாதிப்பை ஏற்படுத்த கூடியது. எனவே இந்த மனுக்களை உயர் நீதிமன்றங்கள் விசாரிப்பது சரியாக இருக்காது. வக்ஃபு சட்டத் திருத்தத்தில் பல்வேறு சர்ச்சைக்குரிய திருத்தங்கள் உள்ளன. அவை குறிப்பட்ட இந்த மதத்தினரை ஒடுக்குவதாக உள்ளது.
எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும். சட்டமே முழுவதும் தவறு என்று கூறவில்லை. மாறாக ஒரு குழுவினரின் உரிமையை பாதிக்கும் வகையிலான விஷயங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.
மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் :-
வக்ஃபு என்பது இஸ்லாம் மதத்தோடு ஒருங்கிணைந்த விவகாரம். தொண்டு என்பது இஸ்லாம் மதத்தில் அவசியமானது. அது அந்த மதத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அதனை மாற்றுவது அரசியல் சாசனம் வழங்கி உள்ள உரிமை மீதான தாக்குதல்.
தி.மு.க தரப்பு மூத்த வழக்கறிஞர் வில்சன் :-
வக்ஃபு புதிய சட்டத்தின் படி ஒரு நபர் தான் ஒரு இஸ்லாமியர் என்பதை நிரூபிக்க 5 ஆண்டுகள் தேவைப்படுகிறது. இது எந்த வகையில் நியாயமானது. இது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. வக்ஃபு சட்டம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. அரசியல் சாசனம் 26, 300 A பிரிவுகளுக்கு எதிரானது.
5 ஆண்டுகள் மதத்தை பின்பற்றினால்தான் நன்கொடை வழங்க முடியும் என்பது மத உரிமைகளுக்கு எதிரானது. வக்ஃபு புதிய சட்டம் இஸ்லாமியர்களுக்கு 5 ஆண்டுகள் நன்னடத்தை என்ற ஒரு விதியை விதிக்கிறது. ஒரு மதக்குழு சொத்துக்களை வாங்கவும், வைத்திருக்கவும் அனுமதிக்கும் பிரிவு 26(c) ஐ இது மீறுகிறது. இவ்வாறு இந்த உரிமைகளை கட்டுப்படுத்த ஒரு சட்டம் இயற்றுவது என்பது, பொது ஒழுங்கு பிரச்சனை , சுகாதார பிரச்சனை மற்றும் ஒழுக்கத்திற்கு எதிரானதாக இருந்தால் மட்டுமே இயற்ற முடியும்.
மூத்த வழக்கறிஞர் ஹசிஃபா அகமதி :-
ஒருவர் 5 ஆண்டுகள் பின்பற்றினால்தான் இஸ்லாமியன் என்ற ஒரு தோரணையிலான சரத்து, சுதந்திரமாக மதத்தை பின்பற்ற அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைக்கு எதிரானது.
மத்திய அரசின் சொலிசிட்டர் துஷார் மேத்தா வாதம்:-
நாடாளுமன்ற கூட்டுக்குழு பல ஊர்களுக்கு சென்று விரிவாக கருத்து கேட்டு பின்னர்தான் சட்டம் இயற்றப்பட்டது.
உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் கேள்வி;
இந்து அறநிலையத்துறை சட்டத்தின் படி, இந்துக்கள் மட்டுமே அதனை நிர்வகிக்க முடியும். அப்படி இருக்கும் போது வக்ஃபு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை?. பயனாளிகளால் அல்லது வக்ஃபு தீர்ப்புகளால் வக்ஃபு சொத்துக்கள் என நிறுவப்பட்டால் அது செல்லாது என்று கூறுகிறார்களா?. அந்த நடைமுறை தற்போதைய சட்டப்படி தொடர முடியுமா, முடியாதா?.
ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு வரை சொத்துக்களை பதிவு செய்யும் நடைமுறை இல்லை. 14, 17 நூற்றாண்டுகளில் உள்ள சொத்துக்கள் கூட வக்ஃபு சொத்துக்களாக உள்ளன. உதாரணத்துக்கு ஜாம்மா மசூதி உள்ளது என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். மேலும் இந்து சமய அறநிலையத்துறை, திருப்பதி தேவசம் போர்டு உள்ளிட்ட இந்து கோயில் நிர்வாக அமைப்பில் இந்துகள் அல்லாதோர் உள்ளனரா?. மாவட்ட ஆட்சியர் வக்ஃபு சொத்தை முடிவு செய்வது நியாமானதா?.
தலைமை நீதிபதி:-
பயனாளியால் வக்ஃபு என ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தால், 2025 சட்டத்தின்படி அது செல்லாது என்று அறிவிக்கப்படுமா?.
துஷார் மேத்தா:-
அவ்வாறு பதிவு செய்யப்பட்டிருந்தால் அது செல்லும்.
உச்ச நீதிமன்றம் கேள்வி:
வக்ஃபு சொத்தை ஒருவர் பதிவு செய்ய வரும்போது, அது அரசு நிலம் என்று அரசு கூறினால் என்ன நடக்கும்?. வக்ஃபு சொத்து என்பதை ஏன் நீதிமன்றம் முடிவு செய்ய அனுமதிக்கக்கூடாது?.
துஷார் மேத்தா :-
வக்ஃபு பதிவு எப்போதும் கட்டாயமாக இருந்தது. வக்ஃபு என்பது பதிவு செய்யப்பட வேண்டியிருந்தது.1995 சட்டத்திலும் அது கட்டாயமாகும். மேலும் வக்ஃபு சொத்து பதிவு செய்யப்படாவிட்டால் அவர் 1995 சட்டத்தின்படி சிறைக்குச் செல்கிறார்.
தலைமை நீதிபதி:-
வக்ஃபு சொத்து எது என்று ஆட்சியர் முடிவு செய்யத் தொடங்கும்போது, அது வக்ஃபு சொத்து என்பதை தடுக்கும் பயன்பாட்டையும் நிறுத்துகிறதே? இது நியாயமா?.
துஷார் மேத்தா:-
அதன் பயன்பாடு நிறுத்தப்படவில்லை. வக்ஃபு என்ற அந்தஸ்து மட்டுமே தடுத்து நிறுத்தப்படுகிறது. குறிப்பாக அந்த நிலம் வக்ஃபு சொத்தாக இருப்பதை தடுக்கிறது.
தலைமை நீதிபதி:-
அப்படியெனில் அந்த சொத்தில் இருந்து வரும் வாடகை யாரிடம் எங்கே செலுத்தப்படும்?. இவ்வாறு தெளிவு இல்லையெனில் ஏன் இந்த ஏற்பாடு?.
உச்ச நீதிமன்றம் கருத்து :-
வக்ஃபு நன்கொடை மூலம் பெரும் சொத்தை பதிவு செய்வது கடினம். எந்த ஒரு நீதிமன்ற தீர்ப்பையும் செல்லாது என்று நாடாளுமன்றத்தால் அறிவிக்க முடியாது. பயனாளிகள் அடிப்படையிலான வக்ஃபு சொத்துக்களை நீக்கினால் அது பிரச்னையாக இருக்கும்.
துஷார் மேத்தா :-
அதிக அளவிலான இஸ்லாமியர்கள் வக்ஃபு சொத்தை வக்ஃபு சட்டம் நிர்வகிப்பதை விரும்பவில்லை. அவர்கள் அந்த சொத்தை அறக்கட்டளை நிறுவி நிர்வகிக்க விரும்புகின்றனர்.
தலைமை நீதிபதி :-
அப்படியெனில் இது போன்று இந்து கோயில் நிர்வாகத்திலும் புற மதத்தினரை ஈடுபடுத்தலாம் என கூறுகிறீர்களா?. ஏனெனில் இப்போது இயற்றப்பட்ட வக்ஃபு திருத்த சட்டப்படி 8 பேர் இஸ்லாமிய உறுப்பினர்கள், 2 ஓய்வு பெற்ற நீதிபதிகள் பிற அனைத்து உறுப்பினர்களும் இஸ்லாமியர் அல்லாதோர்.
துஷார் மேத்தா :-
இவ்வாறு லாஜிக் பேசினால் இந்த வழக்கை இந்த அமர்வு கூட விசாரிக்க முடியாது.
தலைமை நீதிபதி:-
நாங்கள் இந்த இருக்கையில் அமரும்போது எந்த மதமும் எங்களுக்கு கிடையாது?. அனைத்து தரப்பினரும் சமமே. எவ்வாறு இப்படி நீங்கள் ஒரு ஒப்பீட்டை கூற முடியும்?. அப்படியெனில் இந்து கோயில் நிர்வாகத்தில் இந்து அல்லாதோரை நிர்வாகிகளாக சேர்க்கலாமா?. மேலும் ஆலோசனை வழங்கும் குழுவில் வேறு சமயத்தை சேந்தவரை இந்து கோயில் நிர்வாக வாரியத்தில் உறுப்பினராக்கலாமா?.
நீதிபதிகள்:-
இனிமேல் இஸ்லாமியர்களை இந்து அறக்கட்டளை வாரியங்களில் அனுமதிப்பீர்களா?. இதற்கு வெளிப்படையாக பதில் சொல்ல வேண்டும். மத்திய அரசு வழக்கறிஞரிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி. தொடர்ந்து வக்ஃபு மனு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்றமே மனுக்கள் மீது முடிவு செய்ய வேண்டுமா?. பொது உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டுமா? என்று நீதிபதிகள் கருத்து கேட்பு.
வழக்கறிஞர்கள்:-
உச்ச நீதிமன்றமே வழக்கை விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கருத்து.
நீதிபதிகள்;
ஆட்சியர் நடவடிக்கைகளைத் தொடரலாம், ஆனால் இந்த விதி அமலுக்கு வராது. வக்ஃபு வாரியம் மற்றும் கவுன்சிலைப் பொறுத்தவரை, 2 (ex officio) அதிகாரப்பூர்வ உறுப்பினர்களை நியமிக்கலாம். ஆனால் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் மட்டுமே.
வக்ஃபு வாரியத்தில் 2 ஓய்வு பெற்ற நீதிபதிகள் நியமனம் செய்வது செல்லும். மற்ற உறுப்பினர்கள் அனைவரும் இஸ்லாமியர்களாகவே இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை நாளை 2 மணிக்கு தள்ளிவைத்தது.