எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தாக்கல்!
இஸ்லாமிய மதத்தில் இறை பணிகளுக்காக அளிக்கப்படும் அசையும், அசையா சொத்துகள் மற்றும் நன்கொடைகளை வக்ஃபு என்பார்கள். இந்த வக்ஃபு சொத்துக்கள் நிர்வாகம் செய்வதற்கு 1954 ஆம் ஆண்டு வக்ஃபு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதை ஒழுங்குபடுத்த 1995, 2013 ம் ஆண்டுகளில் வஃக்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன.
தொடர்ந்து ஒழுங்குபடுத்தப்பட்ட வக்ஃபு சட்டத்தில் மேலும் சில திருத்தங்களை கொண்டுவர மக்களவையில் இதற்கான மசோதா கடந்தாண்டு ஆகஸ்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து ஜேபிசி குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது. இந்த குழுவில் பெரும்பான்மையாக இருக்கும் பாஜக கூட்டணி உறுப்பினர்களின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து 44 திருத்தங்கள் கொண்ட 655 பக்க அறிக்கையை தயாரித்து அவை தலைவர் ஓம் பிர்லாவிடம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு புதன்கிழமை தாக்கல் செய்தார். எதிர்கட்சிகள் தொடர்ந்து மக்களவையில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதத்தில் தங்களின் கருத்துகளை பதிவு செய்ய உள்ளனர். வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றவுள்ளார். இந்த மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடத்தப்படும் என்றும், தேவைப்படும்பட்சத்தில் விவாத நேரத்தை அதிகரிக்கவுள்ளதாகவும் ஏற்கெனவே மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.