வஃக்ப் திருத்த சட்டம் விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்!
வஃக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான இஸ்லாம் சமூக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே காங்கிரஸ், திமுக, தவெக, விசிக, ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அச்சட்டத்திற்கு எதிரான உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம் வஃக்ப் திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தது.
இந்த நிலையில் வஃக்ப் திருத்த சட்டம் மத உரிமைகளை பாதிக்காது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், இந்தச் சட்டம் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறாது என்றும் அவ்வாறு அடிப்படை உரிமைகளை மீறும் சட்டம் என்ற வாதங்கள் தவறானவை என்றும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் வக்பு திருத்த சட்டம் என்பது வக்பு வாரியத்துக்கான சொத்துக்களை நிர்வகிப்பது தொடர்பானது ஆகும். சொத்துக்களை ஒழுங்குபடுத்துவதற்காக மட்டுமே இந்தத் திருத்தங்கள் உள்ளது என்று மத்திய அரசு அந்த பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளது. மேலும் அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள மத சுதந்திரங்களை இந்த வக்பு சட்டம் மீறவில்லை என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் ஒவ்வொரு சட்டமும் அரசியல்சாசனத்துக்கு உட்பட்டது என்றும் வழக்கு தற்போது ஆரம்பகட்ட நிலையில் உள்ளதால் வஃக்பு 2025 சட்டத்தின் விதிகளை அமல்படுத்துவதை தடுத்து நிறுத்தும் வகையில் எந்த இடைக்கால உத்தரவையும் உச்சநீதிமன்றம் பிறப்பிக்க வேண்டாம் என மத்திய அரசு பிரமாணபத்திரத்தில் வலியுறுத்தியுள்ளது.
மேலும், வக்பு சட்ட திருத்தம், இஸ்லாமியர் ஒருவர் அறக்கட்டளையை உருவாக்கவும் பொது கட்டமைப்பை தேர்வுசெய்ய வழிவகை செய்துள்ளதாகவும் வஃக்பு சொத்துக்களை அடையாளம் காணுதல், வகைப்படுத்துதல் மற்றும் சீர்படுத்துதல் ஆகியவற்றை புது சட்டத்திருத்தம் மூலம் செய்யலாம் எனவும் மத்திய அரசு அதில் தெரிவித்துள்ளது.
வக்பு சொத்துக்கள் நீதித்துறையின் ஆய்வுக்கும், மேற்பார்வைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை திருத்தச் சட்டம் உறுதிப்படுத்துகிறது என்றும் வஃக்பு திருத்த சட்டம் என்பது வக்பு சொத்து பிரச்சனை விவகாரத்தில் எந்தவொரு நபரும் நீதிமன்றங்களை அணுகக்கூடாது என்பதை மறுக்கவில்லை என்றும் மத்திய அரசு அந்த பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளது.