வக்ஃபு சட்டத் திருத்தம்: விஜய்யின் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்!
பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனால் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் மசோதா சட்டமாக மாறி ஏப்.8ஆம் தேதி அமலுக்கும் வந்தது. இதனை எதிர்த்து காங்கிரஸ், திமுக என பல கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளன.
அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் வக்ஃபு திருத்தச் சட்டத்தை எதிர்த்து நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் வக்ஃபு சட்ட திருத்தத்துக்கு எதிரான வழக்கு தொடர்பாக த.வெ.க தலைவர் விஜய் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களோடு தனது தரப்பு மனுவையும் பட்டியலிட்டு விசாரிக்க தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா முன்பு முறையீடு செய்யப்பட்டது. அப்போது, முறையீடு தொடர்பாக பதிவாளரிடம் கொடுத்த அனைத்து மனுக்களுக்கும் உரிய விசாரணை தேதி கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்த நீதிபதிகள், முறையீடு தொடர்பான கோரிக்கை கொடுக்கப்பட்டு இன்று முறையீட்டுக்கு பட்டியலிடப்படாத மனுக்கள் தொடர்பாக பதிவாளரை அணுகும்படி அறிவுறுத்தினர்.
மேலும் வக்ஃபு விவகாரம் தொடர்பாக ஏற்கனவே விசாரணை தேதி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அன்று அந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்தார்.
வக்பு சட்டத் திருத்தத்துக்கு எதிராக இதுவரை 20க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில்10 வழக்குகள் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.