கழுகு, காகம்... ‘லியோ’ வெற்றி விழாவில் குட்டி ஸ்டோரி சொன்ன விஜய்!
‘லியோ’ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தில், வழக்கம் போல நடிகர் விஜய் குட்டி ஸ்டோரி ஒன்றை கூறினார்.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 19-ம் தேதி வெளியான 'லியோ' திரைப்படம் ரூ. 540 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றி நடைபோடுகிறது. இந்நிலையில் 'லியோ' படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், அர்ஜுன், மன்சூர் அலி கான், இயக்குனர் மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன், மடோனா செபாஸ்டின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் நடிகர் விஜய் ‘நா ரெடி தான் வரவா’ பாடலை பாடி பேச்சை தொடங்கினார். வழக்கமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நடிகர் விஜய் குட்டி ஸ்டோரி ஒன்று சொவது உண்டு. அதேபோல் இந்த வெற்றி விழாவிலும், நடிகர் விஜய் குட்டி ஸ்டோரி ஒன்றை கூறினார்.
இதையும் படியுங்கள் : வேளாங்கண்ணியில் கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலி - இஸ்ரேல், பாலஸ்தீன போரில் உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்தனை
விஜய் கூறிய குட்டி ஸ்டோரி
“ஒரு காட்டுக்கு 2 பேர் வேலைக்கு போறாங்க. அங்கு மான், முயல், காக்கா, கழுகு... காடுனா இருக்கும் தானே... அதுக்கு சொன்னேன். இருவரில் ஒருவர் வில் அம்பு கொண்டு போனார். மற்றொருவர் ஈட்டியை கொண்டு போனார். வில் அம்பு வைத்திருந்தவர் முயலை அடித்து கொண்டுவந்தார். ஈட்டியை வைத்திருந்தவர் யானையை கொல்ல முயற்சி செய்தார். முடியவில்லை. வெறும் ஈட்டியுடன் வந்தார்.
இதில் யார் Achiever. யானைக்கு முயற்சி செய்தவர் தான் Achiever. நம்மால் எதை ஈசியாக ஜெயிக்க முடியுமோ, அதில் ஜெயிப்பது வெற்றி இல்லை. நம்மால் ஈசியாக ஜெயிக்கவே முடியாது என்று இருப்பதில், ஜெயிக்க முயற்சி செய்வது தான் வெற்றி. லட்சியத்தை பெரிதாக வையுங்கள். பெரிதும் பெரிது கேள். பெரிதாக கனவு காணுங்கள் நண்பா... அதில் தவறு கிடையாது” என்று நடிகர் விஜய் கூறினார்.