#USElection2024 வாக்குப்பதிவு தொடங்கியது!
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைப்பெற்று வருகிறது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. மேலும் அந்நாட்டு சட்டப்படி நவம்பர் முதல் செவ்வாய்க்கிழமையன்றுதான் அதிபர் தேர்தல் நடைபெறும். அதன்படி இன்று அமெரிக்காவில் அதிபர் தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது அதிபராக இருக்கும் ஜோ பைடனின் பதவிக்காலம் வரும் ஜனவரியோடு முடிவடைய உள்ளது.
இத்தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக இருக்கும், இந்திய வம்சாவளியான கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர். அமெரிக்காவில் காலை 7 மணிக்கு தேர்தல் தொடங்குகிறது என்றால் இந்தியாவில் மணி மாலை 5.30. அந்த வகையில் தற்போது அமெரிக்காவில் தேர்தல் தொடங்கியுள்ளது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் கமலா ஹாரிஸுக்கே சாதகமாக அமைந்தநிலையில், தற்போது போட்டி கடுமையாகி உள்ளது. போர்க்கள மாகாணங்களில் ட்ரம்புக்கான ஆதரவு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தொடங்கியுள்ள முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை அதிகாலை 4.30 மணிக்கு முடிவடையும். இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை 11.30 மணிக்கு நிறைவடையும். தொடர்ந்து தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கும். நாளையே யார் அதிபர் என தெரியவரும். ஒருவேளை போர்க்கள மாகாணங்களில் இழுபறி நீடித்தால், முடிவை அறிவிக்க இரண்டு நாட்கள் ஆகும்.
இரண்டு முக்கியக் கட்சிகளில் எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கக்கூடிய மாகாணங்களே போர்க்கள மாகாணங்கள் என அழைக்கப்படுகின்றன. அதாவது இந்தத் தொகுதியில் இவர்தான் வெல்வார் என யாரையும் கூறிவிடமுடியாது. இந்த வரிசையில் பென்சில்வேனியா, மிஷிகன், விஸ்கான்சின், ஜார்ஜியா, வடக்கு கரோலினா, அரிஸோனா, நவாடா போன்ற மாகாணங்கள் உள்ளன. இந்த மாநிலங்கள் தான் அமெரிக்காவின் அதிபர் யார் என தீர்மானிக்க உள்ளன.