"வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம்தோறும் ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் 'அன்புக்கரங்கள்' திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர், அவர் மேடையில் பேசியதாவது,
"திராவிட மாடல் என்றால் எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான். ஆனால் அதற்காக பாடுபடுவது எளிதானது அல்ல. சாமானிய மக்களின் எழுச்சிதான் திராவிட இயக்கம். மக்களின் குரலாக திமுக ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தோம், பதவி மோகத்தில் இருந்தோம் என சிலர் நினைக்கின்றனர். எங்கள் அடிப்படையே பதவி அல்ல, பொறுப்புதான். அதிகாரம் என்பது சாமானியனுக்காக போராடுவது. எங்களை பொறுத்தவரை சொகுசுக்கு இங்கு இடமில்லை. இந்த உழைப்பை தான் பெரியார், அண்ணா, மு.கருணாநிதி கற்றுத்தந்தனர்.
வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம். அந்த நம்பிக்கையை பெறும் கொள்கையும், செயல் திட்டமும், உழைப்பும் எங்களிடம் உள்ளது. அந்த நம்பிக்கையினால் பெறப்பட்டிருக்கும் இந்தப் பொறுப்பு, சமூகத்தின் கடைக்கோடி மனிதரையும் கைக்கொடுத்து மேலே தூக்கி விடுவற்காக கிடைத்த வாய்ப்பு. அந்தக் கையாகத்தான் என் கை இருக்கும். அப்படித்தான் இருந்துகொண்டு இருக்கிறது.
கொரோனாவால் பெற்றோர் இருவரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.3000 வீதம் 3 ஆண்டு தந்தோம். குழந்தைகளுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறோமே, அதெல்லாம் வாக்கு அரசியலுக்காக செய்வதா? 6,288 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கபோகிறோம். இது என்ன வாக்கு அரசியலுக்காக செய்வதா? திட்டங்களுக்கும் வாக்கு அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இனிமேல் நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களை கவனித்துக்கொள்ள அன்புக்கரங்கள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உங்களுக்காக நான் இருக்கிறேன்"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.