’வாக்கு திருட்டு விவகாரம்’ - புலனாய்வு விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு!
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த 7 ஆம் தேதி டெல்லியில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினார். அதில், கர்நாடகாவில் நடந்த மக்களவைத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். கா்நாடகத்தில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் வாக்காளா் பட்டியல் சட்ட விரோதமாக திருத்தப் பட்டதாகவும், இதன்மூலம் வாக்குகள் திருடப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் தேர்தல்களில் வாக்கு திருட்டு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ரோஹித் பாண்டே என்பவர் இம்மனுவை தாக்கல் செய்துள்ளார்.
”கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக மாநிலம் பெங்களூரு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மகாதேவ்பூரா பகுதியில் ஐந்து வகையான வாக்கு திருட்டு நடைபெற்றதாக குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார் இது நாடு முழுவதும் வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் நடைபெறுவதை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
எனவே இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் .மேலும் வெளிப்படையான நேர்மையான மற்றும் சுதந்திரமான தேர்தலை நடத்துவது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்
தேர்தல் நடைபெறும் பொழுது அதற்கான வாக்குப்பதிவு விவரங்கள் முழுமையாக சேகரிப்பது, சிசிடிவி காட்சிகளை பத்திரப்படுத்துவது, வாக்காளர் பட்டியலை மின்னணு முறையில் தேடுவதற்கு ஏற்ப நவீன முறையில் வெளியிடுவது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதற்கான தனித்தனி உத்தரவுகளை தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்” என்று அம்மனுவில் கோரப்பட்டுள்ளது