உலகக்கோப்பை ஆடுகளத்தில் பதிவான பாலஸ்தீன ஆதரவு குரல்!
கோலாகலமாக நடைபெற்று வரும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் போது, ஆடுகளத்தில் பாலஸ்தீன ஆதரவாளர் நுழைந்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
கடந்த மாதம் 7-ஆம் தேதி காஸா - இஸ்ரேல் இடையே போர் மூண்டது. இதில் பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஆயிர கணக்காக உயிரிழந்து வருகின்றனர்.
காஸா பகுதியை ஒரு மாதத்துக்கும் மேல் முற்றுகையிட்டு மிகக் கடுமையாக குண்டு வீச்சு நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், தரைவழியாகவும் காஸாவுக்குள் நுழைந்து தாக்குல் நடத்தி வருகிறது. இந்நிலையில் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், இன்று உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது பாதுகாப்பை மீறி பாலஸ்தீன ஆதரவாளர் ஒருவர் ஆடுகளத்தினுள் நுழைந்து விராட் கோலியை கட்டிப்பிடித்தார். அவர் அணிந்திருந்த மேல் சட்டையில் ‘Free palestine’ , ‘Stop Bombing Palestine' என பொறிக்கப்பட்டிருந்தது. பின்னர் பாதுகாவலர்களால் அவர் கைது செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.