அரசு ஹெலிகாப்டர்களை பயன்படுத்தினாரா #VKPandian? விசாரணை தொடக்கம்!
நவீன் பட்நாயக் ஆட்சியின் போது வி.கே.பாண்டியன் அரசுக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்களை அதிக அளவில் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை தொடங்கியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தள ஆட்சியின்போது அவரது உதவியாளரான ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன் அரசுக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்களை அதிக அளவில் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக, அந்த மாநில அரசு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது. அதில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளத்தை தோற்கடித்து பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து, அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக வி.கே.பாண்டியன் அறிவித்தார்.
இந்நிலையில் முதலமைச்சராக நவீன் பட்நாயக் பதவி வகித்த போது, அவரின் தனிச் செயலராக இருந்த வி.கே.பாண்டியன் மக்களின் வீடுகளுக்குச் சென்று குறை தீர்க்கும் முன்னெடுப்பின்கீழ் மாநில அரசுக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்களை அதிகளவில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக ஒடிசா வர்த்தக மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிபூதி பூஷன் ஜெனா கூறியதாவது:
கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் 2023-ஆம் ஆண்டு டிசம்பர் வரை பல்வேறு பகுதிகளுக்கு அரசின் ஹெலிகாப்டரில் வி.கே.பாண்டியன் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக விரிவான விசாரணை தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் சொத்துகளை தவறாக பயன்படுத்துபவர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கடந்த 2023-ஆம் ஆண்டில் மட்டும் ஒடிசாவின் 30 மாவட்டங்களில் உள்ள 190 பகுதிகளுக்கு வி.கே.பாண்டியன் ஹெலிகாப்டர் மூலம் சென்றதாக பாஜகவினர் குற்றஞ்சாட்டினர். ஆனால், மக்கள் குறைதீர் முகாம்களின்கீழ் பெறப்பட்ட 57,442 மனுக்களில் 43,536 மனுக்களுக்கு வி.கே.பாண்டியன் தீர்வு கண்டதாக அப்போதைய பிஜு ஜனதா தள அரசு தெரிவித்தது. இருப்பினும், இதற்கான செலவுக் கணக்குகள் குறித்து எவ்வித தரவுகளும் வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து அந்த மாநில சட்டத்துறை அமைச்சர் கூறியதாவது;
“வி.கே.பாண்டியனுக்காக ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் தலா ரூ.3 லட்சம் மதிப்புள்ள 450 ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டன. சட்டவிரோதமாக இந்த தளங்களை அமைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இந்த விவகாரத்தில் முழு விசாரணை மேற்கொள்ளுமாறு ஒடிசா மாநில காங்கிரஸும் வலியுறுத்தியுள்ளது.
பிஜு ஜனதா தளம் மறுப்பு:
வி.கே.பாண்டியன் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை பாஜக அரசு சுமத்துவதாக பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ சம்பித் ரூத்ரே கூறினார். மேலும், முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் சார்பாகவே வி.கே.பாண்டியன் பொதுமக்களை சந்தித்து குறைகளுக்குத் தீர்வு கண்டதாகவும் அவர் தெரிவித்தார்.