மக்களுக்கு தேவையான பாதுகாப்பினை உறுதி செய்ய வழியுறுத்தி வி.கே.சசிகலா அறிக்கை!
மக்களுக்கு தேவையான பாதுகாப்பினை உறுதி செய்யவும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தேவையான கட்டமைப்பு வசதிகளை விரைந்து ஏற்படுத்தி தரவும் வழியுறுத்தி வி.கே.சசிகலா விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
“முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு, திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொது மக்கள் ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையில் துன்பப்படுவது மிகவும் வேதனை அளிக்கிறது. நேற்று நள்ளிரவு சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தினால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் கடும் அவதியடைந்துள்ளனர். மக்கள் படும் துன்பங்களைப்பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல் செயல்படும் அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் சென்னைக்கு வெளியே அமைந்துள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படுவதால், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு பேருந்து நிலையத்திற்கு வந்த போதும் போதிய பேருந்துகள் இல்லாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
பொதுமக்கள் பல்வேறு பணி நிமித்தமாக சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் கைக்குழந்தைகளுடன் தாய்மார்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பேருந்துகள் இல்லாமல் நேற்று இரவு பல மணிநேரம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் காத்திருந்து கடும் அவதிக்குள்ளாகியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
அதாவது, பல மணி நேரமாக பேருந்துகள் கிடைக்காமல் காத்திருந்து விரக்தியின் உச்சத்திற்கு சென்ற பயணிகள் நள்ளிரவு 2 மணியளவில் அங்கு வந்த பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும்,பயணிகள் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளியேறும் பகுதியில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது மிகவும் வேதனை அளிக்கிறது.
மேலும், அரசின் நிர்வாக சீர்கேடுகளால், அரசு பேருந்துகள் போதிய பராமரிப்பின்றி இயக்கப்படுவதால், மக்களின் பாதுகாப்பே இன்றைக்கு மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் படிக்கட்டு இல்லா அரசு பேருந்தில் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவா்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் திகில் பயணம் செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதேபோன்று கடந்த சில தினங்களுக்கு முன்பாக, சென்னை திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் நோக்கிச் சென்ற மாநகரப் பேருந்தில் பெண் பயணி ஒருவர் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்தபோது, திடீரென இருக்கையின் கீழே இருந்த பலகை உடைந்து அதன் வழியே கீழே விழுந்துள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டதால் உயிர் பிழைத்து இருக்கிறார். அரசு பேருந்துகள் போதிய பராமரிப்பின்றி இருப்பதால் பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, அரசு தமிழக மக்களுக்கு தேவையான பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தேவையான கட்டமைப்பு வசதிகளை விரைந்து ஏற்படுத்தி தர வேண்டும். மேலும், பொதுமக்களுக்கு அனைத்து நாட்களிலும் போதிய பேருந்து வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.