ஒடிசா அரசியலில் முக்கியத்துவம் பெற்ற வி.கே.பாண்டியன் - தேர்தலில் போட்டி இல்லை என அறிவிப்பு!
தமிழ்நாட்டை சோ்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான வி.கே.பாண்டியன் 2024 மக்களவைத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் சார்பில் போட்டியிடமாட்டார் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் வி.கே.பாண்டியன் என்று அழைக்கப்படும் வி.கார்த்திகேய பாண்டியன். இவர், 2000-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தனிச்செயலாளராக பணியாற்றி வந்த நிலையில், விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்திருந்தார். அதற்கு மத்திய அரசும் ஒப்புதல் கொடுத்தது. விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே, அவருக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்து உடைய பதவி வழங்கப்பட்டது.
ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தள அரசின் பல்வேறு செயல்பாடுகளை ஒருங்கிணைக்கூடிய 5T திட்டம், நவீன் ஒடிசா தலைவராக வி.கே.பாண்டியன் நியமிக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து நவ. 27-ம் தேதி, முதலமைச்சர் நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜூ ஜனதா தளம் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் வி.கே.பாண்டியன். ஆட்சி, கட்சி இரண்டிலும் அதிகாரப்பூர்வமான இடங்களைப் பெற்றுவிட்ட வி.கே.பாண்டியன் விரைவில் ஒடிசா மாநில துணை முதலமைச்சராகவும், 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் தகவல் பரவியது.
இந்நிலையில் பிஜு ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் புவனேஸ்வரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அக்கட்சியின் துணைத் தலைவர் தேவி பிரசாத் மிஸ்ரா கூறியதாவது:
“வரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூட்டத்தில் பாண்டியன் தெளிவுபடுத்தியுள்ளார். அவர் போட்டியிடுவதாக முடிவெடுத்திருந்தாலும் எவ்வித பிரச்னையும் ஏற்படாது. ஒடிஸா மக்களுக்காக முழுமையாகப் பாடுபடப் போவதாக அவர் ஏற்கெனவே உறுதிபூண்டுள்ளார். பாண்டியனைப் பற்றி தேவையற்ற வதந்திகளைப் பரப்புவோர் அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.