ஆஸ்திரேலியாவில் மாணவர்களுக்கான விசா கட்டணம் இருமடங்கு உயர்வு!
சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தி ஆஸ்திரேலிய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிரதமர் ஆண்டனி அல்பனேசி தலைமையிலான ஆஸ்திரேலிய அரசு சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.40,000-ஆக இருந்த விசா கட்டணத்தை தற்போது ரூ.89,000ஆக உயர்த்தியுள்ளது. அதிகளவிலான மாணவர்களின் இடம்பெயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த கட்டண உயர்வு முடிவு கொண்டு வரப்பட்டதாகவும், இந்தக் கட்டண உயர்வு இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் விசாவை நீட்டித்துத் தங்கியிருக்கும் மாணவர்கள் மற்றும் இரண்டாவது முறை மாணவர் விசா பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 30% உயர்ந்து கடந்த 2022-23 ஆண்டுகளில் 1,50,000-ஐ எட்டியுள்ளதைத் தொடர்ந்து விசா விதிகளில் உள்ள தளர்வுகளை நீக்கியதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு ஆங்கில மொழிப் புலமை விதிகள் கடுமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர் விசா பெறுவதற்கு மாணவர்களின் சேமிப்பு இருப்புத் தொகையை ரூ.13 லட்சத்திலிருந்து ரூ.16 லட்சமாக ஆஸ்திரேலிய அரசு உயர்த்தியிருந்தது. தற்போது விசா கட்டணத்தையும் உயர்த்தியிருப்பது அங்கு படிக்கச் செல்லும் இந்திய மாணவர்களை பாதிக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது கொண்டு வந்துள்ள மாற்றங்கள் சர்வதேச கல்வி முறையின் தரத்தை மேம்படுத்தவும், இடம்பெயர்வை குறைவாகவும், சிறப்பாகவும் மாற்ற ஆஸ்திரேலியாவிற்கு உதவும் என்று ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளேர் ஓநீல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய பல்கலைக்கழகக் குழு தலைவர் லூக் ஷீஹி கூறுகையில், “இந்த முடிவு சர்வதேச மாணவர்களின் கல்விக் கட்டணத்தை நம்பியுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் பொருளாதாரம் இரண்டுக்கும் உகந்ததல்ல” என தெரிவித்துள்ளார். அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளை விட ஆஸ்திரேலியாவின் மாணவர் விசா கட்டணம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.