ட்ரெஸ்ஸிங் ரூமில் கண் கலங்கிய ரோஹித் சர்மாவை தேற்றிய விராட் கோலி - வீடியோ இணையத்தில் வைரல்!
நேற்றைய போட்டிக்கு பிறகு ட்ரெஸ்ஸிங் ரூமில் கண் கலங்கிய ரோஹித் சர்மாவை விராட் கோலி தேற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த ஜூன் 2ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தமாக 20 அணிகள் பங்குபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தேர்வு செய்யப்பட்டன. முக்கியமாக கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கே தகுதிபெறாமல் வெளியேறியது.
அரையிறுதியின் முதல் போட்டியில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் தென்னாப்பிரிக்கா வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 56 ரன்களுக்கு சுருண்டனர். இதன் பின்னர் சொற்ப ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 8.5 ஓவர்களிலேயே வெற்றி வாகை சூடி இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக கால் பதித்துள்ளது.
இந்த நிலையில் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நேற்று இந்தியாவும் இங்கிலாந்து அணிகளும் மோதின. இந்த சூழலில் ஆட்டம் நடைபெறும் கயானாவில் பலத்த மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் மழை பெய்வது நின்றதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலாவதாக களமிறங்கி பேட்டிங் செய்தது.
இந்தியாவின் இன்னிங்ஸில் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக ஆட்டத்தை தொடங்க, விராட் கோலி 1 சிக்ஸர் அடித்த நிலையில் 9 ரன்களுக்கும் அடுத்த வந்த ரிஷப் பந்த் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனைத் தொடர்ந்து ரோஹித்துடன் சூர்யகுமார் யாதவ் கைகோர்த்தார். இந்தியா 8 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 65 ரன்கள் சேர்த்திருந்தபோது மீண்டும் மழையால் ஆட்டம் தடைப்பட்டது.
இதன் பின்னர் மீண்டும் தொடங்கியது. ரோஹித் ஷர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் அணியின் எண்ணிக்கையை உயர்த்திய நிலையில் ரோஹித் 39 பந்துகளில் 57 ரன்களும், சூர்யகுமார் 36 பந்துகளில் 47 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க 20ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7விக்கெட் இழப்பிற்கு 171ரன்கள் குவித்தது.
இதனைத் தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி சார்பில் கேப்டன் ஜாஸ் பட்லர் 23 ரன்களுக்கும், ஃபில் சால்ட் 5 ரன்கள் மற்றும் ஜானி பேர்ஸ்டோ 0 ரன்களுக்கு வெளியேறினர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மொயீன் அலி , கரன் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 16.4ஓவர்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 103ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 68ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
Rohit Sharma crying 😭😭😭??? pic.twitter.com/bbtRGTwNcK
— Jon | Michael | Tyrion (@tyrion_jon) June 27, 2024
போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி ட்ரெஸ்ஸிங்க் ரூமுக்கு வருகை தந்தபோது சக வீரர்கள் உள்ளே நுழைந்து கொண்டிருக்க ரோஹித் சர்மா அறையின் வெளியே அமர்ந்திருந்தார். இதனைத் தொடர்ந்து ரோஹித் சர்மா திடீரென கண் கலங்குவது போன்ற காட்சிகளும் அருகில் சென்ற விராட் கோலி அவரை தேற்றுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.